ராஜகோபாலன் அமர்வு - நீலம் 21
https://venmurasu.in/neelam/chapter-21/
பகுதி ஏழு**: 2.** அகம் அழிதல்
முத்தமிட்டு மீட்டும் இசைக்கருவியென பிறிதொன்றில்லை. சிறகிலெழுந்த இசையை விஷக்கொடுக்கிலும் உணர்ந்த முதற்கருவண்டு முத்தமிட்டு முத்தமிட்டு துளைத்து எழுந்த பொன்மூங்கில் அறிந்திருக்காது மூங்கில்குலமே அதன் வழியாக இசைகொள்வதை. தன்னுள் எழுந்த முதல் இசையைக்கேட்டு தானே திகைத்து காற்றோடி எழுந்த மூச்சு நிலைக்க அசைவழிந்திருக்கும். பின்னர் ஒவ்வொன்றையும் ஒலியாக்கி உணர்ந்திருக்கும். மண்ணிலூறிய உப்பை. நீர் பெருக்கை. இலைகளறியும் காற்றை. கிளைகள் வளைந்தாடும் நடனத்தை. ஒளிபெருகும் வானை. வான் நோக்கிய மலர்தலை. மலர்கொண்ட கனிதலை. கனிவூறிய விதையை. விதை கொண்ட அமைதியை.
நள்ளிரவின் இருளில் கருநாகம் சுற்றி மேலேறும் தழுவலின் மென்மையை அது பாடியிருக்குமா என்ன? அதன் சிறுமுட்டைகள் கனக்கும் குழலகத்தை, விஷநாக்கு நீட்டி வளையும் ஆயிரம் கருநாகங்கள் அதில் எழுந்து தழுவி கீழே வழிவதை அந்தக் கருநாகம் கூட அறிந்திராது. மூங்கில் முத்தில் மணியொளிரும் விழி எழுந்தது எப்படி? நீர் நீண்ட நெளிவில் நஞ்செழுந்தது எப்படி? இசையாகி எழுகையில் வனமாகி நிறையலாகுமெனக் கண்டடைந்த மூங்கில் வாழ்த்து பெற்றது. அதில் வந்தமரும் கருங்குயில் திகைக்கிறது. அதன் பாடலை மீளப்பாடும் மரக்கிளையைக் கண்டு. இருளுக்குள் ஓடும் காற்று சுழன்று கூந்தல் பறக்க திரும்பி வருகிறது. அதன் அகத்தேடலை ஒலியாக்குவது யாரென்று.
ராதை வேய்குழலைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். வெளியே அவள் இல்லம் சூழ்ந்த மூங்கில்காட்டுக்குள் எங்கோ பாடிக்கொண்டே இருந்தது அது. இல்லத்தின் இருண்ட வைப்பறைக்குள் புல்பாயில் போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். “வேனில் எரிகிறது வெளியே. ஏனடி போர்த்தியிருக்கிறாய்? உடல் காய்கிறதா உனக்கு?” என்று கீர்த்திதை நூறுமுறை தொட்டு நோக்கினாள். தொடும் கையெல்லாம் பனியிலூறியதுபோல விதிர்க்கச்செய்யுமளவுக்கு அவள் சருமம் மென்மைகொண்டிருந்தது. கட்டைச்சரடை இழுத்து இழுத்து விம்மவைக்கப்பட்ட முரசுத்தோல் போல. பனிக்காலையில் காற்றின்றி படர்ந்த காட்டுச்சுனையின் நீர்ப்பரப்பு போல. “என்னடி செய்கிறது உனக்கு?” ராதை இருளில் விழிமின்ன நோக்கினாள். “என்னென்று நான் எங்கனம் அறிவேன் அன்னையே?”
வான் நீலம் ஒளிவிடும் இரவுத்தடாகமென அவள் விழிகள். கருநாகம் குடியேறிய சிதல்புற்றின் குழிகள். நெய்கொதிக்கும் செம்புக்கலம் அவள் உடல். “என்னடி செய்கிறது? சொல்லித்தொலைய மாட்டாயா?” என்று தலையிலறைந்துகொண்டாள் அன்னை. இரவிருளில் தலைமறைத்த மருத்துவச்சி வந்து அவள் கைப்பிடித்து நாடி நோக்கி “பித்தம் பெருகி போத விளிம்பழிகிறதே. சிவமூலி முகர்ந்தாளோ? ஊமத்தை தின்றாளோ?” என்றாள். “நாடிகளில் நஞ்சு ஓடுகிறது. ஆய்ச்சியே, கருநாகப் பல்பட்டு கண்ணிருண்டோர் கைகளிலேயே இத்துடிப்பை இதுமுன்னர் அறிந்துள்ளேன்” என்றாள். அன்னை நெஞ்சழுத்தி விம்மி நின்றாள்.
இரவென்ன பகலென்ன எப்போதுமென ஒலிக்கிறது அக்குழல்நாதம். அதில் முத்தமிடும் உதடுகள்தான் என்ன? அதன் உடலான வடுக்களில் ஓடும் விரல்கள்தான் என்ன? சொல்லற்ற கீதம். சொல்திரளும் கணத்திற்கு முற்கணத்தில் தேங்கிச் சுழன்று சுழன்றாடும் நாகம். நீலம், நீலவிஷம், விஷக்காலம், காலாகாலம், காலன் கழல், கழலாடும் நடனம், கருமை. கரிய சுழியாகி இசையாகி சுருளாகி சுருள்மையமாகி செவியாகி சிந்தையாகி சத்தாகி சித்தப்பெருவெளியாகி ஆனந்தநிலையாகி நீலமணியாகி நின்றிருக்கும் இக்கணமே இப்பிரபஞ்சம் உருவாகி வாழ்ந்து நீண்டு மயங்கி அழிந்து நீலமாகும் காலமென்றானது. குழலே, நீலமொளிரும் விரல்களே, நீலம்பெருகிய பேரிசையே. இங்கு ஆம், இங்கு, இப்போது, இனியெப்போதுமென்று…
யாருக்காக இசைக்கிறாய் காரிருளே? என்னை பிச்சியாக்கி இருளுக்குள் இருளாக்கி ஒடுங்கவைத்தாய். என் அறைச்சுவர்களெல்லாம் குருதி வழியும் கருவறைச் சுவர்களாக சுருங்கி விரிகின்றன. உப்புச்சுவைக்கிறது கருவாழும் குருதி. உப்பாகி நிறைகிறது வெம்மைகொண்ட இருள். கருமுதிர்ந்து உலகடைந்த கருவாயில் வழியாக உள்ளே மீண்டு சுருண்டிருக்கிறேன். மூடுங்கள் அந்த வாயிலை. “அன்னையே, அந்த வாயிலை மூடுங்கள். என் கண்ணை கிழிக்கிறது கதவுச்சிறு வெளிச்சம்.” “ஒற்றைத்தலைவலியா? ஒளிபட்டு நோகிறதா?” என்றாள் அன்னை. “அன்னையே, சாளரங்களை மூடுங்கள். அந்த ஒலி கேட்கலாகாது” என்றாள் ராதை. “மூடுங்கள் சாளரங்களை! மூடுங்கள் அன்னையே!” என்று கூவினாள்.
அன்னை திகைத்தாள். “இல்லத்துக் கதவெல்லாம் மூடித்தான் இருக்கிறது. எந்த ஒலி கேட்டாய்? இளையவளே, நீ கேட்கும் இசைதான் என்ன?” அன்னை பரிதவித்து அறைதோறும் சுற்றிவந்தாள். சித்தி கைபற்றி கொல்லைக்குக் கொண்டுசென்று “என்னசெய்வேன்? ஏதென்றறியேன். இல்லாத இசையொன்றைக் கேட்கிறாள் என் சிறுமி. இல்லத்து இருள் விட்டு எழுந்துவர மறுக்கின்றாள். இரவுபகலில்லை. ஊணும் நீருமில்லை. என்னாகப்போகிறாள்?” என்றாள். “அக்கா, அவள் கேட்கும் அவ்விசையின் சிறுதுளியை நாமும் கேட்டதில்லையா என்ன?” என்றாள் கீர்த்திமதி.
ஓவியம்: ஷண்முகவேல்
“கொழுநன் கைப்பிடிப்பாள். கருவுற்று பெண்ணாவாள். கன்னிமனம் கண்டதெல்லாம் கனவாகி மணியாகி உள்ளிருளில் ஒடுங்கும். பெண்ணாகி வந்ததில் இதுவே பேதைப்பருவம் என்பார்” என்று அவள் சொல்ல அன்னை முகம் குனித்து கண்ணீர் ஒற்றி “யானொன்றறியேனடி இளையவளே. இக்குவளை நுனி நுரைக்கும் என் மகளை அக்குவளை ததும்பாமல் ஊற்றிவிட்டால் இப்பிறவியில் இனியென்ன என்றமைவேன்” என்றாள். “இல்லம் தோறும் எழுந்தமையும் நெருப்பிது. அன்னையர் விழிநீரால் அணைவது” என்றாள் கீர்த்திமதி.
ஒவ்வொரு நாளாக ஆயர்குடி இதழ்விட்டுக்கொண்டிருந்தது. மூதன்னை முகாரை தன் பழைய பொன்னகைகளை கொண்டுவந்து மகளிடம் கொடுத்தாள். “மூதன்னையின் நகையணிந்து மணம்காணவேண்டும் சிறுமகள். இப்பொன்னை உருக்கி புதுநகைசெய். ஒன்றை மட்டும் என் நினைவாக வைத்துக்கொள்ளட்டும்” என்றாள். மூதன்னை சுகதை தன் மைந்தன் ரிஷபானுவிடம் “அன்னைவழி அன்னை அவள் உடல்சூடும் நகையெல்லாம் அளிக்கலாம். அவள் உளம்சூடும் பொற்தாலி தந்தைவழித் தாயே அளிக்கவேண்டும்” என்று அளித்தாள். “என் மூதாய் எனக்களித்தாள். உன் மகள் இதை நாளை வரும் ஒரு மகவுக்களிப்பாள். யமுனையில் ஓடும் சிற்றோடம் இது” என்றாள். அதை கையில் வாங்கி கண்ணோடு சேர்த்து நெஞ்சு விம்மி நெடுமூச்செறிந்தார் ரிஷபானு.
மாமியர் மேனகையும் ஷஷ்தியும் கௌரியும் தாத்ரியும் தாதகியும் தங்கள் அணியொன்றை அவளுக்கு அளித்தனர். சித்தி கீர்த்திமதி அவள் காதுக்கு அணியும் பொன்னூல் வரிப்பின்னல் கொண்ட பட்டாடையும் அளித்தாள். தேன் சேர்க்கும் ஈக்களென உறவும் சுற்றமும் கொண்டுவந்து சேர்த்தவற்றால் ரிஷபானுவின் குடி நிறைந்துகொண்டிருந்தது. வண்ண உடைகளின் ஒளிகொண்டு இல்லச்சுவர்கள் மிளிர்ந்தன. சிரிப்பொலியும் பேச்சொலியும் எழுந்து சாளரங்கள் முழங்கின. சமையற்கட்டில் எப்போதும் அடுப்புகள் எரிந்தன. மலர்மணம் கொண்டுவந்த தென்றல் நெய்மணம் கொண்டு சென்றது.
அத்தனைக்கும் நடுவே அவள் மட்டும் தனித்திருந்தாள். அறையிருளில் புல்பாயில் தன் கையால் தன்னை அணைத்து படுத்திருந்தாள். “எங்கே பொன்பூத்த கொன்றை? புதுவெள்ளம் எழுந்த கங்கை?” என்று கேட்கும் முதியவர்களிடம் காட்ட அன்னை உள்ளே வந்து நோக்கியபோது விழிமங்கி உதடு உலர்ந்து நெற்றிமயிர் கலைந்து எழுந்தமர்ந்து “யாரது?” என்றாள். அன்னை அவள் முகத்தை ஈரத்துணியால் துடைத்து கொம்புச்சீப்பால் குழல்சீவி புத்தாடை அணிவித்து பொன்னகைகள் பூட்டி கைபற்றி கொண்டுவந்து நிறுத்தினாள். ஒரு சொல்லும் கேளாமல் ஒன்றையும் அறியாமல் வேள்விக்கூடத்தில் எழுந்து வேறுலகில் அலையடிக்கும் தென்தழல் போல் அவள் நின்றிருந்தாள்.
தாய்மாமன் சீர்கொண்டு பத்ரகீர்த்தியும் மகாகீர்த்தியும் கீர்த்திசந்திரனும் வந்தனர். மாமன்கள் கொடை நோக்க ஆயர்குடியே திண்ணையில் கூடியது. பொன்னும் புதுமலரும் ஆடைகளும் அணிப்பொருட்களும் கொண்ட தாலங்களை தொட்டுத் தொட்டு மதிப்பிட்டது. லலிதையும் விசாகையும் சுசித்ரையும் சம்பகலதையும் ரங்கதேவியும் சுதேவியும் துங்கவித்யையும் இந்துலேகையும் இல்லத்திலேயே இருந்தனர். லசிகையும் காதம்பரியும் சசிமுகியும் சந்திரலேகையும் பிரியம்வதையும் மதுமதியும் இல்லத்து ஏவல் முடிந்தபோதே வந்து சூழ்ந்தனர். கோபியர் சிரிப்பொலியில் சலங்கை கட்டி ஆடுவதாய் தோன்றியது ராதையின் இல்லம்.
ஒவ்வொரு அணியாக தன் கழுத்தில் எடுத்துவைத்து தோழியரின் விழிகளில் அழகுநோக்கினர் கோபியர். ஒவ்வொரு அணியிலும் ஒருகணம் அவர்கள் மணமகளாகி மீண்டனர். “இத்தனை அணிகளுக்கும் அப்பால் எஞ்சுவதே அழகு என்பார்” என்றாள் லசிகை. “அணியெல்லாம் அல்லிவட்டம். பெண்ணழகே இதழ்களாகும்” என்றாள் மூதன்னை சிரித்தபடி. “இவ்வணிகளை அமைத்த பொற்கொல்லர்கள் இவற்றை இவள் அணிவதை காணவேண்டாம். இவை அழகிழக்கக் கண்டு அகமழிவார்கள்” என்றாள் ஆய்ச்சி ஒருத்தி. அன்னை முகாரை இன்முகம் காட்டி மெல்ல எழுந்துசெல்வது உப்பும் மிளகும் எடுத்து கண்ணேறு கழிப்பதற்கென்று அறிந்த கோபியர் விழிநோக்கி நகைத்துக்கொண்டனர்.
அக்கரை ஆயர்குடியில் இருந்து மணமகனின் அன்னை ஜடிலையும் அவள் மகள் குடிலையும் ஆய்ச்சியர் ஐவர் சூழ பெண்ணுக்கு அணிவிக்கும் பொன்னும் பட்டும் உப்பும் அரிசியும் கொண்டுவந்தனர். “பொன்மலர் போல் பெண் இருக்கிறாள். போய்ச்சேரும் குடியோ முட்புதர்போல் தெரிகிறதே” என்றாள் ஆய்ச்சி ஒருத்தி. “சேருமிடம் தேரும் நதியென ஏதுமில்லை” என்றாள் ஒரு மூதாய்ச்சி. “மண் சுவையே நீர்ச்சுவை. பெண்ணுக்கும் விதி அதுவே” என்றாள் இன்னொருத்தி. முகம் நொடித்து ஆயர்மகள் ஒருத்தி “பிச்சியென்றிருக்கிறாள். இவளை கைப்பிடித்து குடியேற்ற அவனும் பேயனென்றிருக்கவேண்டும்” என்றாள்.
மங்கலமணநாளில் ஆயர்குடியெங்கும் மாவிலைத் தோரணம் எழுந்தது. குடிதோறும் குலைவாழை கட்டி கோலமிட்டனர். ஆற்றுமணல் விரித்த வழிமருங்கில் அன்றலர்ந்த மலர்கட்டி அணிசெய்திருந்தனர். முழவும் கொம்பும் காலைமுதல் முழங்கின. இருளழியத் தொடங்கும் முன்னே கோபிகைக் கன்னியர் ராதையை எழுப்பி சேலைத்திரைகட்டி மஞ்சளும் சந்தனமும் கஸ்தூரியும் கோரோசனையும் பூசி குரவையிட்டு கொண்டுசென்று யமுனையில் நீராட்டினர். அணியறையில் அமர்த்தி பட்டாடை சுற்றி பொன்னகை பூட்டினர்.
பித்தெடுத்த விழி தூக்கி “எவர் எழுப்பும் இன்குழலோசையடி அது?” என்றாள் ராதை. “என்னடி கேட்கிறாய்? எங்குளாய் நீ?” என்று அவள் முகத்தை தூக்கினாள் லலிதை. “கண்திறந்து கனவிலிருக்கிறாயா? இக்காலை ஏதென்று அறிவாயா? இன்று உன் மணநாள். நீ கன்னிமை துறந்து கணவன் இல்லம் சேர்கிறாய்” என்றாள். “யார்?” என்றாள் ராதை. “என்னடி இது?” என்று லசிகை திகைக்க “இச்செய்தி எவருமறியலாகாது பெண்களே. பெண்கொண்ட பித்தெல்லாம் முலைப்பாலில் கரைந்து போகும்” என்ற கீர்த்திமதி “படி இறங்கி இவள் சென்றபின்னால்தான் என் தமக்கை பித்தழிந்து பெண்ணாவாள்” என்று நெடுமூச்செறிந்தாள்.
மலரணிந்து மங்கல இசை ஒலிக்க யமுனை நதிகடந்து வந்தன ஐந்து அணிப்படகுகள். அவற்றில் மணமகனின் தந்தையென வந்த சிறியதந்தை துர்மதர் மதுவருந்திச் சிவந்த சிறுவிழிகளுடன் வாய் நிறைத்து வெற்றிலைமென்று கழிபற்றி நின்றிருந்தார். அப்பால் தோழர் சூழ மலர்ப்பின்னல் கொண்டு முகம் மறைத்து மணமகன் அமர்ந்திருந்தான். பின்னால் வந்த பாய் விரிந்த சிறுபடகில் மணமகனின் அன்னை ஜடிலை வண்ண உடையணிந்து முகம் மறைத்து அமர்ந்திருக்க அருகே அவள் மகளும் தோழியரும் ஆய்ச்சியர் குழுவும் அமர்ந்திருந்தனர்.
“மணமகனின் பெயரென்னடீ?” என்றாள் லலிதை. “அபிமன்யு என்றார்கள்” என்று லசிகை சொன்னாள். “என்ன பெயர் கொண்டாலும் யாராக இருந்தாலும் பெயரற்றுப் போவதற்கே பிறந்தவனடி அவன்.” அவள் ஆடைபற்றி “என்னடி பேச்சு இது? மங்கலநாளில் மறைசொல் வரலாமா?” என்று ரங்கதேவி அதட்டினாள். லசிகை “அவன் முகம் மறைக்கும் மலர்களை பாரடி. அவையறியும் நான் சொல்வதன் பொருள்” என்றாள். “பேரழகென்பது அழகின்மையைத்தான் சூழப்பரப்புகிறதா என்ன? இவள் தானிருக்கும் இடமெல்லாம் தான் மட்டுமே ஆகும் இளங்கதிர் மலர்” என்று சொல்லி லலிதை பெருமூச்சு விட்டாள்.
முழவும் கொம்பும் முறைசேர்க்க மலர்மாலையும் மணிக்குடையும் மேலாடையும் மோதிரமும் கொண்டு ராதையின் தமையன் ஸ்ரீதமனும் ஆயர்களும் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் அவள் தங்கை அனங்கமஞ்சரியும் ஆய்ச்சியரும் மலர்த்தாலமும் மஞ்சள்நீர்க்குடமும் கொண்டு குரவையிட்டு வந்தனர். படகுகள் கரையணைந்து மணமகன் மண் தீண்டியதும் அனங்கமஞ்சரி மஞ்சள்நீரால் அவன் தாள் கழுவி மலரிட்டு பூசை செய்தாள். மலர்மாலை சூட்டி மேலாடையும் மோதிரமும் அணிவித்து குடைகாட்டி அவனை கூட்டிவந்தான் ஸ்ரீதமன்.
ரிஷபானுவின் இல்லத்து முற்றத்தில் எழுந்த வெண்பந்தலில் அவர் தந்தை மகிபானு மஞ்சள்தலைப்பாகையும் குண்டலமும் மணிக்குச்ச மேலாடையும் அணிந்து பீடத்தில் அமர்ந்திருக்க இருபக்கமும் அவர் மைந்தர்கள் ரத்னபானுவும் சுபானுவும் பானுவும் அவ்வண்ணமே நின்றனர். மறுபக்கம் பீடத்தில் கீர்த்திதையின் தந்தை இந்து நீலத்தலைப்பாகை அணிந்து அமர்ந்திருக்க அருகே அவர் மைந்தர்கள் பத்ரகீர்த்தியும் மகாகீர்த்தியும் கீர்த்திசந்திரனும் நின்றிருந்தனர். குரவை ஒலிக்க கொம்புகள் சேர்ந்தொலிக்க முழவும் முரசும் ஆர்ப்பரிக்க வந்த மண ஊர்வலம் இல்லத்தை அடைந்ததும் ரிஷபானுவும் கீர்த்திதையும் ஏழுதிரியிட்டு எரிந்த விளக்கும் நிறைகுடமும் பொன்மலரும் பொரியும் நிறைந்த மங்கலத்தாலமுமாக எதிர்கொண்டழைத்தனர்.
முதுதந்தையரை வணங்கி முறைமை செய்தபின் பீடத்தில் அமர்ந்த அபிமன்யுவை உள்ளிருந்து எட்டி நோக்கினர் பெண்கள். கீர்த்திமதி “அவளுக்கு இணையில்லை என்றாலும் ஆண்மகனே அவனும்” என்றாள். “ஆயிரம் பசுக்களை ஆளும் ஆயன் என்றார்கள். கையில் ஒரு கங்கணம் இல்லை. காலில் பொற்கழலும் இல்லை. அவன் அன்னையோ பழம்பட்டு உடுத்து பாழ்நெற்றி கொண்டு வந்திருக்கிறாள்” என்று அலர் பேசி விழி கோர்த்தனர் ஆயர்மகளிர்.
கீர்த்திதை அழைத்துச்சென்ற ஜடிலையும் குடிலையும் அவர்குலத்து மகளிரும் உள்ளறைக்குள் சென்று அமர்ந்தனர். குளிர்மோரும் இன்னீரும் கொடுத்து அவர்களை இளைப்பாற்றினர் கீர்த்திமதியும் மேனகையும் ஷஷ்தியும். தாத்ரியும் கௌரியும் தாம்பூலம் கொண்டுவந்தனர். தாதகி சந்தனம் கொண்டுவைத்தாள். பழங்களும் தேன்தினையும் பரிமாறினர். முகமன் சொல்லி முகம் மலர்ந்து “இக்குடியில் இனி உங்கள் சொல்நிற்கும்” என்றாள் கீர்த்திமதி. “இருகுடியை ஆளும் ஒருமைந்தன் வரவேண்டும்” என்றாள் மேனகை.
கோபியர் பெண்கள் கைவளை சிரிக்க, கால்சதங்கை சிரிக்க, கண்கள் சிரித்து, சிரிப்பொலி ஒலிக்க உள்ளறை நுழைந்து “உன் கொழுநன் இல்புகுந்தான். கொம்புபோல மீசை. எருமையென கருவிழிகள். திமில் அசையும் காளை நடை!” என்றனர். ராதை விழிதூக்கி “குழலிசைப்பது யாரடி?” என்றாள். “குழலா? முழவை குழலாக்கும் மதுவேதும் உண்டாயா?” என்றாள் ரங்கதேவி. லசிகை “பிச்சி செவிகளுக்கு எல்லாம் குழலிசையே” என்றாள். “என்னடி கேட்கிறாய்? எனக்குச் சொல்” என்று அமர்ந்த இந்துலேகையை குழல்பற்றி தூக்கி லலிதை “மந்தணம் பேசும் நேரமல்ல இது. மங்கல வினைசூழ அழைத்துச்செல்லவந்தோம்” என்று அதட்டினாள்.
மணவேளை வந்ததும் மண0மைந்தன் கைப்பற்றி துர்மதர் “ஆயர்குலப்பெரியீர். என் மைந்தன் ஆயர் குடிப்பிறந்தோன். ஆயிரம் பசுவுள்ளோன். கையிரண்டு நிறைய பொன்திரட்டி அளித்து கோரி நிற்கிறோம். உம் குடிப்பெண்ணை உவந்தளிக்கவேண்டும். என் குடி தழைக்க அருள்கொள்ளவேண்டும்” என கோரினார். மும்முறை பொன்னும் பூவும் கலந்து அள்ளி பெண்வழித் தாதை காலில் வைத்து துர்மதர் மகள் கோர அவர் எழுந்து வளைகோலைத் தூக்கி “அவ்வாறே ஆகுக! வாழ்க உன் குலம். வளர்க உன் குருதி!” என்றார். தந்தைவழித் தாதை மகிபானு வளைதடி தூக்கி “ஆமென்றுரைத்தேன். அது நலம் சூழ்க!” என்றார். தங்கள் வளைதடிகள் தூக்கி “வாழ்க! வாழ்க!” என்றனர் ஆயர்குடிமூத்தோர்.
“பெண்ணெழுக! பொற்பாதம் வருக!” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. கோபியர் வந்து ராதையை எழுப்பினர். சிறுகழுத்தில் மலர்மாலை கனக்க செந்நிறப் புத்தாடை அலையுலைந்து ஒலிக்க அஞ்சும் காலெடுத்து ராதை நடந்துவந்தாள். பொன்னிறத்தில் புறாக்கள் வருவதுபோல் அவள் சிறுபாதம் தத்தி வரக்கண்டு கைகூப்பி அன்னைமூதாதை இந்து “ஆள்பவளே, அன்னை வடிவானவளே. கன்றுடன் குலம் காக்கும் கொற்றவையே!” என்று வணங்கினார். கண் தூக்கி அவள் முகம் நோக்கிய அபிமன்யு அவள் தலைகுனிந்து வரவில்லை என்று கண்டு திகைத்தான். அக்கூட்டத்தில் எவரையோ தேடுபவள் என அவள் விழிகள் அலைந்தன. ஒவ்வொரு முகமாக சென்றமர்ந்து சென்றமர்ந்து மீண்டன.
இந்து எழுந்து இருகைகூப்பி குலத்தவரை வணங்கி “நன்று சேர்க, நலத்தோரே! இன்று என் இனியமகள் ராதையை இங்கிருக்கும் உங்கள் மொழிசூழ்ந்து நம் குலமூதாதையர் கண்சூழ்ந்து கைபற்றி அளிக்கிறேன். கன்றுடன் பசுசேர்ந்து இவள் இல்லம் பெருகுக. மடிநிறைந்து இவள் குலம் பெருகுக. இவள் தொட்ட கலம் நிறைக. இவள் கைப்பிடித்த கணவன் நெடுநாள் வாழ்க!” என்றார். “வாழ்க! வாழ்க!” என கூவி ஆர்த்தனர் ஆயர்குலத்தோர். முழவுகளும் கொம்புகளும் முரசுகளும் ஆர்த்தெழுந்தன.
பெண்டிரும் தோழியரும் குரவையிட, அன்னையர் மலரும் பொரியும் தூவி வாழ்த்த, குலம்சேர்ந்த பந்தலின் நடுவே மைத்துனரும் தம்பியரும் இருபக்கமும் நின்றிருக்க ஏற்றிய நெய்விளக்கில் எரிந்த தழல் சான்றாக ராதை கரம்பற்றி அபிமன்யுவுக்கு அளித்தார் ரிஷபானு. மாலை மாற்றி மணித்தாலி பூட்டி அவளை மணம் கொள்கையிலும் அவள் மருள் விழிகள் நிலையழிந்து தேடிச்சலித்து சுழன்று வருவதையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். கன்றுடன் கூடிய வெண்பசுவை ரிஷபானு அளிக்க ராதை அதன் கயிறு பற்றி அவனுக்கு அளித்தாள். பால்நிறைந்த மண்குடத்தை இடையேற்றி அவன் கைபற்றி நடந்து வெளியே சென்றாள்.
ஆயர்குலமாளும் விண்ணளந்தோன் ஆலயத்திலும் கொற்றவை குடிகொள்ளும் மலைக்குகையிலும் வழிபட்டு அவர்கள் இல்லம் மீண்டனர். ஆறுவகை கூட்டும் நெய்மணக்கும் கறிவகையும் தேனும் கனியும் கொண்ட விருந்துக்குப்பின் ராதையை கைப்பற்றி கூட்டிவந்து அறையில் அமர்த்தினர் கோபியர். “இன்றொருநாள் மட்டுமேனும் தலைகுனிந்தால் என்னடி? நாணமின்றி மணம் கொண்ட ஆயர்மகள் எவருண்டு?” என்றாள் ரங்கதேவி. “அங்கே குழலிசைத்தது யார்?” என்று மருண்ட விழி விரித்து ராதை கேட்டாள். லலிதை “அவளைச் சற்று துயில்கொள்ள விடுங்களடி” என்று கோபியரை அழைத்துவந்து அறைக்கதவை சாற்றினாள்.
நெஞ்சில் கைவைத்து நெகிழ்ந்துருகி விழிபனித்து கீர்த்திதை சொன்னாள் “இன்றென ஒருநாள் இவள் வாழ்வில் இல்லையென்றே நேற்றுவரை நான் நினைத்திருந்தேன் கன்னியரே. இனியெல்லாம் என் அன்னையரும் தேவியரும் உளங்கனியும் வழி.” லலிதை கோபியரை அழைத்து “எவரேனும் ஒருவர் எப்போதும் இங்கிருக்க வேண்டுமடி” என்றாள். “பிச்சி மனம் போகும் போக்கென்ன என்றறியேன். அவள் கணவன் கைபற்றி படகேறிச் செல்லும் வரை கண் ஒன்று அவள் மீது இருந்தாகவேண்டும்.” ரங்கதேவி “அவள் பித்து முதிர்ந்து பெரும்கனியாகி விட்டதோடி?” என்றாள். ஒருவர் முகம் ஒருவர் நோக்கி சொல்லற்று நின்றனர் கோபியர்.