போகன் அமர்வு கட்டுரை 3: ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை-சுந்தர ராமசாமி

 https://azhiyasudargal.wordpress.com/2012/03/31/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81/


‘ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை ‘ என்ற தலைப்பில் என்னை இளைஞர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒரு படைப்பாளி என்று கூறுகிற போது என்னை நான் சிறிது வரையறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் மொழி சார்ந்த ஒரு படைப்பாளி என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஓவியம் சார்ந்தோ, சிற்பம் சார்ந்தோ, இசை சார்ந்தோ படைப்புத் தொழிலில் ஈடுபட்டவனல்லன் நான். படைப்பாளி என்ற வார்த்தையை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். இலக்கியமே வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறது. வாழ்க்கையைப் படைப்பு முறையி  ல் அணுக விரும்புகிற ஒரு படைப்பாளி என்று நான் என்னைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் 

sundara-ramaswamyஇலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.

பெரும்பாலும் இலக்கியப் படைப்பாளிகள் எல்லோருமே அவர்கள் தீவிரமான படைப்பாளிகள் என்றால், படைப்பாளி என்ற சொல்லுக்கு அருகதை உள்ளவர்கள் என்றால், அவர்கள் தீவிரமான வாசகர்களாகவும் தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். இளவயதில் ஒருவனுக்கு இந்த வாசிப்பு ஏற்பட்டு மிகச் சிறந்த படைப்புக்களோடு மோதல்கள் நிகழ்ந்து, படைப்பின் ஊற்றுக்கண் திறந்து அவனும் ஒரு படைப்பாளியாக மாறிக் கொள்கிறான் என்று நினைக்கிறேன். படைப்புக்கு முன்னும், படைக்கும் காலங்களிலும், படைக்க முடியாத காலங்களிலும் அனுபவ வறட்சியாலோ அல்லது வயோதிகத்தாலோ அல்லது பொறிகள் சுருங்கிப் போவதாலோ படைக்க முடியாத காலங்களில் கூட படைப்பாளிகள் வாசகர்களாக இருக்கிறார்கள். இப்போது முன்புபோல் எழுத முடியவில்லை; படிக்கத்தான் முடிகிறது என்று சொல்கிறார்கள். ஆக எந்த நிலையிலும் தொடரக்கூடிய ஓர் நிகழ்வாக இந்த வாசிப்பு இருந்துகொண்டிருக்கிறது.

வாசிப்பு என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தையின் உண்மையான பொருள் என்ன ? வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் இந்த வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறபோது இது மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக எனக்குப்படுகிறது.

மாணவர்களாகிய நீங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறீர்கள். நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை – மிக மேலான பகுதியை – அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள். அந்த அர்த்தத்தில் இன்று நாம் வள்ளுவனுடன் பேச முடியும்; கம்பனுடன் உறவாட முடியும்; ஷேக்ஸ்பியரின் மிகச் சாராம்சமான பகுதிகள் என்ன என்பதைத் தெளிளத் தெளிவாக, துல்லியமாக நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்தக் காலத்தில் வாழ்கின்ற எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.

ஆக, மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் மிகுந்த பரவசத்தோடு பெற்றிருக்கும் இந்த வாய்ப்பை, சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் விசேஷமான வசதியுடன் வாழ்ந்திருந்தாலும் கூட, இந்த அளவிற்கு விரிவாகப் பெற்றிருக்க முடியாது. புத்தகங்கள் அச்சேறத் தொடங்கிய பின் ஒரு மிகப் பெரிய அறிவுப் புரட்சி, கலைப்புரட்சி, கலாச்சாரப் புரட்சி நிகழ்ந்து வருகிறது. இதைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்து கொள்கிற வாய்ப்பை இந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பெற்றிருக்கிறோம். இப்படி யோசிக்கும்பொழுது இன்று வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய ஒருவன் ஏதோ ஒரு துறையைச் சார்ந்து பணியாற்றக் கூடியவன், குடும்பம் சார்ந்து இயங்கக் கூடியவன், உறவினர்களிடம் நட்புப் பாராட்டக் கூடியவன் அதாவது பிரத்யட்சமான வாழ்க்கையை, எதார்த்தமான வாழ்க்கையை எதிர்கொள்ளக் கூடியவன் எதற்காகப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற கேள்வியையும் நாம் எழுப்பிக் கொள்ளலாம்.

இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுதான் கூர்மையான பொறிகளை நாம் பெற்றிருந்தாலும் கூட, நம்முடைய கவன வட்டங்கள், நம்முடைய அறிவு வட்டங்கள், நம்முடைய அனுபவ வட்டங்கள் மிகக் குறுகிய எல்லைகளிலேயே இயங்குகின்றன. தொலைதூரம் என்னால் பார்க்க முடியாது. தொலை தூரத்தில் இருக்கக்கூடிய வாசனையை என்னால் நுகர முடியாது. என்னுடைய அனுபவங்கள் எனக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அந்த அளவு அவை என்னிடம் மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்குக் கூட எனக்குப் பிறருடைய அனுபவங்கள் தெரியாது. ஆகவே இந்த வாழ்க்கையின் அகண்டகாரமான தன்மையையும், இந்த வாழ்க்கையில் பூமிப் பந்தில் ஒரு எறும்பு ஒட்டிக் கொண்டு இருப்பது போல் இருக்கக்கூடிய என்னுடைய நிலையையும் நினைத்துப் பார்க்கும்பொழுது பிறருடைய வாழ்க்கை சார்ந்த உண்மைகளையும் பிறருடைய வாழ்க்கை சார்ந்த சாராம்சங்களையும் சத்தான பகுதிகளையும் தெரிந்துகொண்டு அதன் மூலம் இந்த முழு வாழ்க்கையைப் பற்றி, இந்த வாழ்க்கையின் பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இதுதான் வாசிப்பின் தேவையை வற்புறுத்தக் கூடிய காரணமாக அமைகிறது.

இந்தக் காலத்தை எதிர்கொள்ளக்கூடிய மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ ஒரு விதத்தில் முழு வாழ்க்கையின் கோலங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இவர்கள் காலத்தால் பின்தங்கிப் போய்விடாமல் உருவாகி வரும் மிக மோசமான காலத்தை – மிக மோசமான காலம் ஒன்று உருவாகி வருகிறது; நாம் அதைப்பற்றி அறிந்திருக்கலாம்; அறியாமல் இருக்கலாம். ஆனால் காலத்தினுடைய மோசமான விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் – எதிர்கொள்வதற்கு வாழ்க்கையின் முழுக் கோலங்களைப் பற்றிய உணர்வுகளை, அனுபவங்களை, அறிவுகளை மாணவர்கள் முடிந்த மட்டும் தேடிக் கொள்வது நல்லது என்று படுகிறது.

மாணவர்கள் இயன்ற வரையிலும் தீவிரமான வாசகர்களாக இருக்கக்கூடிய பெரும் வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நாம் வற்புறுத்திக் கூற விரும்பும் கருத்து. இது மிகவும் முக்கியமானது. மற்றொன்று உங்கள் துறை சார்ந்த விஷயங்கள். மாணவர்கள் கல்லூரிகளில் பல்வேறுபட்ட துறைகளைக் கற்றிருக்கலாம். அந்தத் தேர்வுகள் சுத்தமாக நிகழ்கின்றனவா என்பதைப் பற்றி எனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. அநேக சந்தர்ப்பங்களில் முதிர்ச்சி அடையாத மனநிலையில், அல்லது ஒரு பதட்டத்தில், அவசரத்தில் தனக்கு வழிகாட்ட போதிய விவேகம் கொண்ட தந்தையோ, தாயோ அல்லது குடும்ப உறவினர்களோ இல்லாத நிலையில், மாணவர்கள் பல்வேறுபட்ட துறைகளை எடுத்துப் படிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆக தங்களுடைய கண்ணோட்டத்தைச் சேர்ந்த, தங்களுடைய ஆளுமையைச் சேர்ந்த, தங்களுடைய ருசிகளுக்கு ஏற்ற துறையைத்தான் எப்போதும் அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இளமைக் காலத்தில் 18 – 20 வயது வரும்போது தமக்கு அதிக வயதாகிவிட்டது; நாம் விரைவில் கல்வியை முடித்துக் கொண்டு ஏதாவது ஒரு தொழிலுக்கு அல்லது ஒரு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற அவசர உணர்வும் இளைஞர்களுக்கு ஏற்படுவது இயற்கை என்று எனக்குத் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்த வரையில் ஒருசில இழப்புகளுக்கு நீங்கள் உங்களை ஆளாக்கிக் கொண்டாலும் கூட, ஒரு சில சிரமங்களுக்கு உங்களை நீங்கள் ஆளாக்கிக் கொண்டாலும்கூட அல்லது உங்களுடைய ஆசைகளிலிருந்தோ அல்லது உங்களுடைய குடும்பத்திலிருந்தோ சில விமர்சனங்களுக்கு நீங்கள் ஆட்பட்டார்கள் என்றாலுங்கூட, சரியான துறையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லுவேன். இந்தத் துறைகளை மாற்றிக் கொள்ளக்கூடிய விஷயம் இங்கு முக்கியமாக இந்தியாவில் அல்லது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையை தரக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால், மேல்நாட்டில் பலரும் தவறான துறையை விட்டு சரியான துறையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். 50, 55 வயதிலும் கூட ஒருவர் இப்போதுதான் என்னுடைய துறை, என்னுடைய ருசி, என்னுடைய அணுகுமுறை அல்லது என்னுடைய ஆளுமை எனக்குத் தெரிந்தது; ஆகவே, நான் என்னுடைய துறையை மாற்றிக் கொண்டு விட்டேன் என்று சொல்லக்கூடிய சோதனைகள், இந்த சோதனையில் அடையக்கூடிய வெற்றிகள், இவை நிரந்தரமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்குப் பல்வேறு உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.

ஆக, மாணவர்கள் அல்லது மாணவிகள் கல்லூரியில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயமல்ல. ஒருசமயம் அவர்கள் சரியான துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒருக்கால் அவ்வாறு தேர்ந்தெடுக்கவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு இருக்குமேயானால் அவர்கள் விரும்பக்கூடிய துறையைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்றைய உலகில் அதிக அளவு உள்ளன. அந்தத் துறையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் அதைச் சார்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் போது – இந்தியாவிலும் சரி, குறிப்பாகத் தமிழகத்திலும் சரி – நான் சந்திக்கக்கூடிய பலரும் அந்த துறையைச் சார்ந்த ஒரு வல்லமையைத் தேடிக் கொண்டவர்களை விட, அதிகமாக அந்தத் துறையைச் சார்ந்து நின்று தங்கள் வாழ்க்கைக் கோலத்திற்கு ஏற்றவாறு அதைச் சமாளிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் – அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் – அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் – அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.

இளைஞர்களாகிய நீங்கள் இந்தச் சுலபமான வழியில் விழுந்துவிடக் கூடாது என்று ஆத்மார்த்தமாக விரும்புகிறேன். ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்வது என்பது அவ்வளவு கடினமான விஷயமல்ல. அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து நாம் அதில் தேர்ச்சி பெறும் போது மிகுந்த தன்னம்பிக்கை பெறுகிறோம். அந்தத் துறையைச் சார்ந்த மரபுரீதியான விஷயங்கள் மட்டுமல்ல, பாடபுத்தகங்களைச் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல, இன்று அந்தத் துறை அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பற்றியும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அதையும் கற்றுத் தேர்ந்தால்தான் இன்றைய காலத்தை எதிர்கொள்ள முடியும். ஆக, துறையை நன்றாகக் கற்றுக் கொள்ளும் போது வாழ்க்கையில் அணுகு முறையிலேயே ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. நீங்கள் உள்ளூர மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக மாறுகிறீர்கள். உங்களைப் பற்றியே உங்களுக்கு உயர்வான எண்ணம் ஒன்று ஏற்படுவதற்கு இது அடிப்படையான காரணமாக அமைகிறது. இதற்கு மாறாக துறை சார்ந்து சமாளித்துக் கொண்டிருப்பவர்கள் அந்தச் சமாளிப்பினால் பிற்காலத்தில் அந்தத் துறையைக் கற்றுக் கொள்வதற்கான ஆற்றலையே இழந்து விடுகிறார்கள். இவ்வளவு நாட்கள் இந்தத் துறையைச் சமாளித்துக் கொண்டிருந்துவிட்டோம், குறை நாட்களையும் சமாளித்துத் தீர்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இவர்கள் கடைசி வரையிலும் தன்பலம் என்பதை உணராமல் – ஆத்ம வீரியத்தை உணராமல் – உள்ளூர பலகீனமான சமூகத்தை எதிர்கொள்கிற கோலத்தை நாம் பார்க்கிறோம். இதை ஒரு எச்சரிக்கையாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மாணவ மாணவிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றொரு விஷயம் தாழ்வு மனப்பான்மை சம்பந்தப்பட்டது. பொதுவாகத் தமிழ் மக்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பது என் எண்ணம். நான் அவர்களுடைய புத்தகங்களைப் படித்ததன் மூலம் அறிந்து கொண்ட சில விஷயங்கள், சமூக வாழ்க்கையில் நான் அவர்களுடன் பழகும் போது எனக்குக் கிடைக்கக்கூடிய செய்திகள் ஆகியன பெரும்பாலும் தமிழ் மக்கள் தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இது மிகக் கொடுமையான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் நான் இதை எடுத்துக் கூறும்போது தங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை எதுவும் இல்லை என்ற தோரணையில் அவர்கள் பல வாதங்களை முன் வைப்பதை நான் கண்டிருக்கிறேன். அந்த வாதங்களின் சாராசம்களை நான் ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தாழ்வு மனப்பான்மை நோய் கொண்டவர்கள் மட்டுமல்ல, தாழ்வுமனப்பான்மையை மறுக்கக்கூடிய நோயும் கொண்டவர்கள்; ஆக இரண்டு நோய்கள் கொண்டவர்கள் என்ற முடிவுக்கு நான் வர முடிந்தது.

ஒரு இனம் ஏதோ ஒரு காலகட்டத்தில் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறது என்பது மிக மோசமான, அருவருக்கத் தகுந்த, அல்லது வெட்கப்பட தகுந்த ஒரு விஷயமல்ல. ஆனால் ஸ்தியைப் பற்றி – நாம் இருக்கும் நிலையைப்பற்றி – உணராமல் இருப்பது, தன்போதம் இல்லாமல் இருப்பது, சுயபோதம், சுய அறிவு இல்லாமல் இருப்பது, சுய கணிப்பு இல்லாமல் இருப்பது என்பது மிக மோசமான விஷயம். இதற்கான காரணங்கள் இந்த இனத்திற்கு – மிக செழுமையான பாரம்பரியம் கொண்ட இந்த இனத்திற்கு, தொல்காப்பியத்தைத் தோற்றுவித்த இந்த இனத்திற்கு அல்லது வள்ளுவர், கம்பன், பாரதி போன்ற மிகப் பெரிய கவிஞர்கள் வாழ்ந்த இந்த இனத்திற்கு, சிற்பக் கலையில் மிகுந்த வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு, கட்டிடக் கலையில் மிக வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு ஒரு காலத்தில் கடல்மீது மிகுந்த ஆட்சி கொண்ட இந்த இனத்திற்கு – ஒரு மொழியை இரண்டாயிரம் வருடங்களாக செம்மையாகத் தக்க வைத்துக் கொண்டு, இன்று தோன்றும் கருத்துக்களைக்கூடத் தெளிளத் தெளிவாக சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு மொழியைக் காப்பாற்றி வரும் ஒரு இனத்திற்கு – ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை ஏன் 200 வருடங்களாக ஏற்பட்டது என்பதை எனக்குச் சொல்ல தெரியவில்லை. அதைப்பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுகள் எவை என நாம் எடுத்துக் கொண்டோமென்றால் பல்வேறுபட்ட குணங்கள் மூலம் அந்த நோயின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள முடியும். மிகத் தெளிவான ஒரு நோய்க்கூறு – எல்லோருக்கும் புரியக்கூடிய நோய்க்கூறு – என்னவென்றால் தமிழனுக்கும் ஆங்கிலத்துக்கும் இருக்கக்கூடிய உறவு. அந்த உறவில் தமிழனிடம் இருக்கக்கூடிய மயக்கம் – உறவல்ல, அதில் இருக்கக்கூடிய மயக்கம் – ஆங்கிலத்தின்பால் அவன் கொண்டிருக்கக்கூடிய மயக்கம் மிகச் சிறந்த ஒரு மொழியைத் தன்னளவில் கொண்டிருந்தும் கூட – மிகப் பெரிய பாரம்பரியத்தைத் தன்னளவில் கொண்டிருந்தும் கூட – ஆங்கில மொழியின் மீது தமிழன் கொண்டுள்ள மயக்கம், அதனுடைய கோலங்கள் மிக விரசமானவை. அதை நாம் பரஸ்பரம் பேசிக்கொள்வதைவிட அதை நினைத்துப் பார்ப்பதே நாகரிகமான காரியமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழனுடைய தாழ்வு மனப்பான்மை எப்போதும் தெளிளத் தெளிவாகக் காட்டக்கூடிய அறிகுறிகளில் ஒன்று, மற்றொரு வகையில் சிந்தித்தால், கடந்தகாலத்தில் நமக்கு இருந்த அளவுக்குச் சாதனைகள் இன்று இல்லாமல் போனது. முக்கியமாக ஒரு 50 ஆண்டுகள் நமக்குச் சாதனைகள் இல்லாமல் போனது. இவை நம்முடைய தாழ்வு மனப்பான்மை வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ என்று நான் சந்தேகப்படுகிறேன். தமிழினம் மிகப் பெரிய ஒரு நிகழ்வை நினைத்துப் பரவசம் கொள்ளக்கூடிய எந்த சந்தர்ப்பத்தையும் கடந்த 50 வருடங்களில் உருவாக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

பிளாரன்ஸ் என்ற ஒரு கறுப்பு நிறப் பெண் ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தயத்தில் முன்னே வந்து மற்ற இனத்தைச் சேர்ந்த பெண்களைத் தாண்டி – மற்ற தேசத்தைச் சேர்ந்த பெண்களைத் தாண்டி – முன்னால் வந்து நிற்பது என்பது ஓட்டப்பந்தயம் சம்பந்தமான விஷயம் மட்டுமல்ல; ஒரு இனம் தன்னுடைய பெருமையை வற்புறுத்தக்கூடிய காரியமும் கூட என்று தோன்றுகிறது. அந்த நிகழ்வைப் பார்க்கக்கூடிய கோடிக்கணக்கான கறுப்பர் இனம் ?காலங்காலமாக தங்களை வெளிளை இனம் தாழ்த்திக் கொண்டு வந்திருக்கிறது; அவர்களுக்கு இருக்கக்கூடிய குணாதிசயங்கள் நமக்கில்லை; அந்தச் குணாதிசயங்களை நம்மால் பெற முடியாது என்று நம்மை மட்டம் தட்டி வைத்திருப்பது உண்மை அல்ல ? என்று அந்நேரம் உணர்ந்து பரவசம் கொள்கிறது.

கடந்த 50 வருடங்களில் தமிழனும் இது போன்ற ஒரு பரவசத்தை – கூட்டுப் பரவசத்தை – அடையவில்லை. தனிப்பட்ட முறையில் சில பரவசங்களை அடைந்திருக்கலாம். தனிப்பட்ட முறையில் நம்பிக்கை பெற்றிருக்கலாம். ஆனால் இந்த இனம் மொத்தமாக நம்பிக்கை பெறுவதற்கான காரணம் கடந்த 50 வருடங்களில் உருவாகவில்லை என்று படுகிறது.

கடந்த காலங்களில் நம்முடைய கலாச்சாரத் தலைமை – நம்முடைய அரசியல் தலைமை – நம்முடைய கலைத் தலைமைகள் ஆகியவற்றால் நமக்குப் பெருமை வரவில்லை. மட்டுமல்ல நாம் வெட்கி அவமானப் படக்கூடிய அளவுக்குப் பல சிறுமைகளுக்கும் நாம் ஆளாகியிருக்கிறோம் என்பதையும் கூற வேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் நாம் உண்மையாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நம்முடைய அரசியல் தலைவர்களின் தரத்தைப் பற்றி நீங்கள் ஆத்மார்த்தமாக யோசித்துப் பார்ப்பீர்களேயானால் அவர்களுடைய தரத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய திறமைகள், அவர்களுடைய சவடால்கள் அல்லது சாமர்த்தியங்கள் உள்ளூர் சந்தையில் விலை போகலாம். ஆனால் உலகம் அவர்களை மதிக்காது என்று உள்ளூர நமக்குத் தெரியும்.

நம்முடைய மிகச் சிறந்த எழுத்தாளர்களைத்தான் கலாச்சார தலைவர்கள் என்று நாம் சொல்ல வேண்டும். லட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நம்முடைய எழுத்தாளர்களின் தரத்தை நீங்கள் ஆராய்ந்தால் அவர்களில் பெரும்பான்மையரின் தரத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நுட்பமான வாசனை கொண்ட வாசகர்களுக்கு இது நன்றாகவே தெரியும். நம்முடைய திரைப்பட இயக்குநர்கள் எவரையும் உலகத் திரைப்படம் ஏற்றுக் கொள்ளாது என்பது நமக்குத் தெரியும். வங்காளத்தில் ரவீந்தரநாத தாகூர் தோன்றினார். அவர் மறைவுக்கு சில வருடங்களுக்கு உள்ளாகவே சத்யஜித் ரே என்ற திரைப்பட இயக்குநர் தோன்றி உலகப் படங்களுக்கு நிகரான திரைப்படங்களை எடுத்து வங்காள இனம் தன்னுடைய வல்லமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். இது போன்ற ஒரு நிகழ்வு இன்று வரையிலும் இந்த நூற்றாண்டில் நம்மிடம் நிகழவில்லை. பக்கத்தில் இருக்கக்கூடிய கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள் அரசியல் சார்ந்து ஈ. எம். எஸ். நம்பூதிரிபாடு – இலக்கியம் சார்ந்து சிலர்.

மேற்கத்திய நாகரிகம் என்று சொல்லும் போது ஆடை, அணிகலன்கள் சம்பந்தமான விஷயங்களை நான் சொல்லவில்லை. அவை மேம்போக்கான விஷயங்கள். அடிப்படையாக வாழ்வோடு கொள்ளவேண்டிய உறவுமுறை சம்பந்தமான விஷயங்களில் மேற்கத்திய நாகரிகம் செலுத்தக்கூடிய பாதிப்புகள் நம்மிடம் மிக விரைவாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குறுக்கீடு நம்மைக் கண்டு கொள்வதற்கு – நம்மை நாமே கண்டு கொள்வதற்கு – பெரும் தடையாக இருக்கிறது. நம்மைச் சார்ந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் நமக்கு ஒரு அலட்சியமும், மேல் நாட்டிலிருந்து வரக்கூடிய எல்லா விஷயங்களைப் பற்றி மிகுந்த மோகமும் கொண்டவர்களாக நாம் பொதுவாக இருந்து வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல முடியும். இப்போது உலகெங்கும் அலோபதி வைத்தியத்திற்கு எதிரான ஒரு மனோபாவம் உருவாகி வருகிறது. இந்த வைத்தியத்தை உருவாக்கியவர்கள் உண்மையில் வைத்தியத்தை முதன்மைப்படுத்தியவர்கள் அல்லர் என்றும், அவர்கள் மருந்து வியாபாரிகள் என்றும், மருந்து வியாபாரிகளுடைய சுயநலங்களுக்கு ஆட்பட்ட மருத்துவர்கள் என்றும் சொல்லலாம் என்கிறார்கள். நோயிலிருந்து நிவாரணம் தரக்கூடிய மார்க்கங்களையே இந்தத் துறை சிந்தித்திருக்கிறது. ஆனால் வைத்தியத் துறையின் அடிப்படையான நோக்கம் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பது. அந்த அடிப்படை இந்தத் துறைக்கு இல்லை என்பதை எண்ணற்ற மேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் இப்போது பரப்பி வருகிறார்கள். ஆக உலகத்திற்குப் பொதுவான வைத்தியம் ஒன்று இருக்க முடியாது என்றும், ஒவ்வொரு நாட்டிலும் தொன்றுதொட்டு எந்த வைத்தியமுறைகள் உருவாகி வந்திருக்கிறதோ அந்த வைத்தியமுறைகள் தான் அந்த மக்களுக்கு உகந்ததாக இருக்கமுடியும் என்றும், அந்த வைத்தியத் துறைகளை வளர்த்து எடுப்பது தான் அந்த மக்களுடைய இலட்சியமாக இருக்கவேண்டுமே ஒழிய பிற நாட்டிலிருந்து வைத்தியத்தை இறக்குமதி செய்வது அவர்கள் நோக்கமாக இருக்க கூடாது என்றும் சிறந்த வைத்தியர்கள் கூறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் இவான் இலியா எலிவிச் என்கிற ரஷ்ய மருத்துவர். அவர் தன்னுடைய ஒரு புத்தகத்தில் தான் ஆரம்ப நாட்களில் காந்தியினுடைய சிந்தனைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றார். இந்தச் சிந்தனையைக் காந்தி கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னாலேயே ?ஹிந்து சுயராஜ் ? என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

நாம் மேல் நாட்டு சிகிச்சைக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நமக்கு உகந்த சிகிச்சை முறைகள் நம்முடைய முன்னோர்கள் நமக்கு உருவாக்கி வைத்திருக்கிறார்கள், அதை நாம் வளர்த்துக் கொண்டு போக வேண்டும் என்ற கருத்தை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே காந்தி கூறியிருக்கிறார். ஆனால் அந்தக் கருத்துக்களை இங்கிருக்கும் அறிவாளி வர்க்கம் போதிய அளவுக்கு முக்கியம் தந்து எடுத்துக் கொள்ளவில்லை. இதே கருத்துக்கள் மேல் நாட்டிற்குச் சென்று, அந்தக் கருத்துக்கள் அவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப சிறிது மாற்றப்பட்டு புத்தகங்கள் மூலம் சொல்லப்படும் பொழுது, அவை மிகப்பெரிய கருத்துக்களாக நமக்குத் தோன்றி அதைப் பின்பற்றத் தொடங்குகிறோம். இதே மனோபாவத்தில் தான் மோகம் – வாழ்க்கையைப் பற்றிய ஒரு மோகம் – சார்ந்து வாழ்ந்து வருகிறோம்.

இனிமேல் தனித்து நின்று நமது சிந்தனையை வளர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியமான விஷயமல்ல. உலகத்தில் தோன்றியுள்ள எல்லா சிந்தனைகளையும் நம்முடைய சிந்தனைகளைச் சார்ந்த தெளிவுகளுக்கு உரமாக எடுத்துக் கொள்ளும் பயிற்சியை நாம் பெறலாம். ஆனால் நம்முடைய சிந்தனைகளை விட்டுவிட்டு – நமக்குச் சுயமான விஷயங்களை நாம் முற்றாக விட்டுவிட்டு – வேறு சூழ்நிலையில் வேறு காரணங்களுக்காக உருவான கருத்துக்களை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையின் நிதானத்தை மிகுந்த அளவுக்குக் குறைத்துக் கொண்டு வருகிறோம் என்று நான் நினைக்கிறேன்.

முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.

தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மை இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். எந்தக் காரணத்தைக் கருத்தில் கொண்டு இதைக் கூறினீர்கள். விளக்க முடியுமா ?

தன்னால் எவற்றைச் செய்ய முடியுமோ, அவற்றைக் கூடத் தொடர்ந்து செய்யாமல் இருப்பது; இது தன்னைப் பற்றிய ஒரு தாழ்வான எண்ணத்தை உருவாக்கக்கூடும். ஆசிரியர்களுக்கும், உங்களுக்கும் புரியக்கூடிய இரண்டு உதாரணங்களை நான் முன் வைக்க முடியும். சமூகம் சார்ந்து எண்ணற்ற கருத்துக்களை நான் சொல்ல முடியும். அல்லது திரைப்படம் சார்ந்து பல கருத்துக்களைச் சொல்ல முடியும். அந்தப் படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லது பார்க்காமல் இருக்கலாம். ஆனால் மாணவர்களும், ஆசிரியர்களும் படிப்பதற்கான வாய்ப்பு மிகுதி என்பதால் புத்தகம் சார்ந்த உதாரணத்தை எடுத்துக் கொள்கிறேன்.

டாக்டர் மு. வரதராசன் ?இலக்கியத் திறன் ? என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். முக்கியமாக, தமிழ் துறையைச் சேர்ந்தவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கக்கூடும். என்னுடைய பெரும் மதிப்பிற்குட்பட்டவர் அவர். தமிழ்ப் புலமையாளர்களில் மு.வ.வை நான் மிகவும் மதிக்கிறேன். அவரை நான் ஒரு சிறந்த படைப்பாளி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை ஒரு படைப்பாளி என்றே எற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தன் புலமையை மிக நேர்மையாக, மிகத் தெளிவாக முன் வைத்தவர் அவர் என்ற மதிப்பு எனக்கு உண்டு. ?இலக்கியத் திறன் ? என்ற புத்தகம் தமிழ்க் கவிதையைப் பற்றி ஆராயக்கூடிய புத்தகம். இரண்டாயிரம் வருடங்களில் நம்முடைய பாவினங்கள் எப்படி ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன என்பதைப் பற்றி அந்தப் புத்தகத்தில் மிக நேர்மையாக, சுத்தமாக, தெளிவாக, இன்றைய இலக்கியம் சார்ந்த விஞ்ஞானக் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு முன் வைக்கிறார் டாக்டர் மு. வ. இந்நூலின் கடைசிப் பக்கங்கள் தமிழில் இன்று வந்து கொண்டிருக்கும் புதுக்கவிதை என்ற இயக்கத்தை மனமார வரவேற்கிறது. தமிழ்ப் புலவர்கள் புதுக் கவிதைக்கு எதிராக ஒரு தார்மீகமான கோபம் கொண்டிருந்த காலத்தில், இது தவிர்க்க முடியாத காலத்தின் நியதி என்று உணர்ந்து மு. வ. ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த புத்தகத்தை நீங்கள் படிப்பீர்கள் என்றால் ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியவரும். மு.வ. அப்புத்தகத்தில் கவிதை சார்ந்த ஒரு கோட்பாட்டை உருவாக்கவில்லை.

கவிதை சார்ந்து மிக எளிமையான கருத்துக்கள் இருக்கின்றன. ஒன்று, கவிதை தெளிளத் தெளிவாகப் புரிய வேண்டும் என்ற கருத்து. மற்றொன்று கவிஞன் ஒரு குழந்தை உள்ளம் கொண்டவன் என்பது. இவை போன்ற மிக எளிய கருத்துக்களைக் கூட விளக்க மேல்நாட்டு அறிஞர்களான கவிதை விமர்சகர்களான மாத்யூ அர்னால்டு, ஹட்சன், டி.எஸ்.எலியட், டபிள்யூ. ஹெச். ஆடன், ஷெல்லி போன்றோர்களின் பெயர்களைப் பக்கத்துக்குப் பக்கம் மேற்கோள் காட்டி எழுதிக்கொண்டு போகிறார். பிரிட்டிஷ் இனம் எந்த அளவுக்குக் கவிதைகளுக்குச் சொந்தமான இனமோ, எந்த அளவுக்கு கவிதை சார்ந்த நெடிய நீண்ட பாரம்பரியம் பிரிட்டிஷ் மக்களுக்கு உண்டோ, அந்த அளவுக்குக் கவிதை சார்ந்து தொன்மையான நீண்ட பாரம்பரியம் கொண்ட இனம் தமிழினம். கவிதை பற்றிய கோட்பாட்டைத் தன்னைச் சார்ந்து உருவாக்க முடியாமல் கவிதை சம்பந்தப்பட்ட எளிய கருத்துக்கஆளைக் கூட மற்ற இலக்கிய விமர்சகர்களிடமிருந்து கையேந்தி வாங்கக்கூடிய ஒரு மனோபாவம் தாழ்வு மனப்பான்மை என்று நான் நினைக்கிறேன். இது மிக முக்கியமான ஒரு உதாரணம்.

நான் குறிப்பிட்ட இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்து அதில் இக்கருத்துக்கள் சரியாக இருக்கின்றனவா அல்லது என்னுடைய வாதத்திற்கு ஏற்ப நான் கருத்துக்களை முன் வைக்கிறேனா என்பதை ஆசிரிய நண்பர்கள் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்று தமிழகத்தில் எந்தத் துறையைச் சேர்ந்த விஷயங்களையும் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, நாட்டுப் பாடல்கள், புராதனக் கலைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வோம். சமீப காலங்களில் நாம் அதிக அளவுக்குக் கவனம் செலுத்தி வருகின்ற ஒரு துறை இது. இந்தத் துறை சார்ந்து அதிக அளவுப் பேச்சுக்களும் அத்துடன் சில உண்மையான காரியங்களும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்கின்ற வில்லிசைக் கலை, கணியான் ஆட்டம் போன்ற கலைகளைப் பற்றி அமெரிக்க ஆராய்ச்சி மாணவரான Stuart Blackburn என்பவர் மிகச் சிறந்த ஒரு புத்தகத்தை உருவாக்கி உள்ளார். இவர் தமிழ் நாட்டில் ஐந்தாறு ஆண்டுகள் தங்கி தமிழைக் கற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பல மாதங்கள் தங்கியிருக்கிறார். நாங்கள் நண்பர்கள் நடத்திய கூட்டத்தில் வந்து கலந்துகொண்டிருக்கிறார். நம் மாவட்டத்திலுள்ள பல கிராமத்திற்கும் பயணம் செய்தவர். நம்முடைய பழக்க வழக்கங்களை முற்றாகத் தெரிந்து கொண்டவர். எந்த ஜாதியில் எந்தப் பெண் ருதுவானாலும் அதற்காக அந்த வீட்டில் என்னென்ன செய்வார்கள் எப்படிக் கொண்டாடுவார்கள் என்றால் அவருக்கு அது அத்துப்படியாகத் தெரியும். நம் மக்களுடைய சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் விருப்பு வெறுப்புகள் ஆகியவை அவருக்குத் தெரியும். ஒரு வீட்டில் கோலம் போட்டிருந்தால் அதற்கு என்ன அர்த்தம் ? எந்தெந்த விசேஷங்களுக்கு என்னென்ன கோலங்கள் போடுவார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அவர் அறிந்திருக்கிறார். நம்மைப் பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அதைவிட பலமடங்கு அவர் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் பின்னால் உருவாக்கிய புத்தகத்தைப் போன்ற ஒன்றை நம்மாலும் உருவாக்கியிருக்க முடியும். நமக்கு உருவாக்குவதற்கான வசதிகள் அதிகம். நமக்கு இந்த மக்கள் பேசக்கூடிய மொழி தெரியும். நம்முடைய ஊர் என்பதால் நமக்கு அதிக அளவுக்குப் பழக்க வழக்கங்கள் தெரியும். நமக்குத் தொடர்புகள் மிகுதி. இருந்தாலும் அந்தப் பணியை நாம் செய்யவில்லை. அது போன்ற ஒரு புத்தகத்தைச் சார்ந்து இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் குறைந்த பட்சம் பத்து தமிழ்ப் புத்தகங்களேனும் வரும். அத்தனை புத்தகங்களிலும் அவருடைய பெயரை மேற்கோள் காட்டி, அவரை மிக உயர்வாகப் போற்றிச் சொல்லுவார்கள். இதுபோன்ற எண்ணற்ற காரணங்களை முன் வைத்து நாம் நம்பிக்கை பெறாமல் இருப்பதால்தான் இதற்கு ஈடான சாதனைகளைச் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன்.

மாணவ நண்பர்களுக்கு இதற்கு மாறான கருத்துக்கள் இருக்குமென்றால் அது மிக நல்ல விஷயம். மிக உயர்வான விஷயம். ஏதோ ஒரு காரணத்தினால் என்னுடைய வாதங்கள் தவறு என்று ஏற்படுவதை நான் விரும்புகிறேன். நம் இனம் நம்பிக்கை கொண்ட இனம் என்பது உண்மையென்றால் நாம் பல சாதனைகள் செய்து நம்முடைய கண்ணோட்டத்தையும் சாதனையையும் உலகம் பொருட்படுத்தும் அளவுக்குச் செய்ய வேண்டும்.

மு.வ. ஒரு படைப்பாளி இல்லை என்றீர்கள் ? அதற்குக் காரணம் கூற முடியுமா ? அப்படியென்றால் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய தகுதிகளை மதிப்பீடு செய்யுங்களேன் . . . ?

இதற்கு முன்னால் இல்லாமல் இருக்கக்கூடிய ஒன்றைச் செய்து காட்டக் கூடியது தான் படைப்பு. அது தான் அதன் அடிப்படையான பொருள். இவர் ஒரு நாவல் எழுதி இருக்கிறார். நாவல் என்றால் அது முற்றிலும் புதுமையானதாக இருக்க வேண்டும். நம் மொழியில் இருக்கக்கூடிய ஒன்றையோ பிற மொழிகளில் இருக்கக்கூடிய ஒன்றையோ நகல் செய்ததாக இருக்கக்கூடாது. இந்த படைப்பு ஒருவன் வாழ்க்கையை சுயமாக எதிர் கொள்ளுவதன் மூலம் – அந்த எதிர்கொள்ளுதலிருந்து பெறக்கூடிய அனுபவங்களைச் சார்ந்து – அந்த அனுபவங்களின் சாராம்சம் என்ன என்ற agonyியிலிருந்து, வேதனையிலிருந்து – படைப்பு தோன்றுகிறது.

மு.வ. அவருடைய நாவல்களில் தமிழ்ச் சமுதாயம் அவருக்கு முன் அறிந்திராத எந்த அனுபவத்தையோ அல்லது கருத்துக்களையோ முன் வைக்கவில்லை என்று கருதுகிறேன். அவர் கூறிய கருத்துக்கள் காலம் காலமாக தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர்கள் கூறிய – அதிகமும் வள்ளுவர் கூறிய – கருத்துக்களே ஆகும். இந்தக் கருத்துக்களின் கூட்டுத் தொகுப்பு ஒரு படைப்பாகாது. படைப்பும் சமூக இயல் சார்ந்த நூல்களும் அடிப்படையில் வேறானவை. திருக்குறள் ஒரு நாவல் அல்ல. காரணம் அது வாழ்க்கையைப் பற்றி ஒரு கவிஞர் கண்டடைந்த முடிவான கருத்துக்களைக் கூறுகிறது. வாழ்க்கையின் அனுபவங்களைப் பற்றியோ அந்த அனுபவங்களி லிருந்து இந்தக் கருத்து நிலைக்கு வந்து சேர்ந்த பயணங்களைப் பற்றியோ அந்த நூலில் எந்தத் தடயமும் இல்லை.

ஆக, இரண்டு விதமான நூல்கள் இருக்கின்றன. ஒன்று படைப்பு சார்ந்த நூல்கள். மற்றொன்று ஒரு துறை சார்ந்த – விஞ்ஞானம் அல்லது சட்டம் அல்லது மதம் அல்லது அறவியல் போன்ற துறை சார்ந்த – நூல்கள். இவற்றிற்கு அடிப்படையான வேற்றுமை: ஒன்று அனுபவம் சார்ந்து இயங்குகிறது. அதில் முற்றான முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படவில்லை. வாழ்க்கையைப் பற்றிய கவனங்கள் கொண்டு வரப்படுகின்றன. வாழ்க்கை சார்ந்த மிக மேலான அனுபவங்கள் தேக்கப்படுகின்றன. மற்றொன்றில் முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படுகின்றன. இந்த முடிவான கருத்துக்களை வற்புறுத்திய ஆசிரியராகத்தான் மு.வ.வை எடுத்துக் கொள்கிறேன். மாறாக வாழ்க்கையைச் சார்ந்த அனுபவங்களை அவர் முன் வைத்தார் என்று என்னால் கூறமுடியவில்லை. அதனால் ஒரு படைப்பாளியாக அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நோய்களைக் கண்டுபிடிக்கிற, உயிர் காக்கும் மருந்துகளையும் கருவிகளையும் கொண்ட அலோபதி வைத்தியத்தின் மீது நாம் ஏன் மோகம் கொள்ளக்கூடாது ?

இது வைத்திய சாஸ்திரம் சம்பந்தப்பட்ட கேள்வி. நான் சொல்ல வந்தது அலோபதி வைத்தியத்தைப் பற்றி இன்று உலகத்தில் வாழும், சமூக அக்கறைகள் கொண்ட வைத்தியர்கள் என்ன கூறி வருகிறார்கள் என்பதைத்தான். அலோபதி என்ற சிகிச்சை முறை, மொத்த நலங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டதல்ல. நோயாளிகளின் பிறப்பு, வளர்ப்பு அவர்களுடைய பழக்க வழக்கங்கள், அவர்களுக்கும் அவர்கள் எதிர் கொள்கிற சமூகத்திற்கும் உள்ள உறவுகள், அவர்களுக்கும் அவர்கள் ஆற்றக்கூடிய காரியங்களுக்கும் உள்ள உறவுகள், அவர்களுக்கு இருக்கக்கூடிய வசதிகள் இவற்றைத் கருத்தில் நிறுத்திக் கொண்டு உருவான ஒரு சிகிச்சை முறை அல்ல. மாறாக ஒரு நோய்க்கு உடனடியாக நிவாரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மருந்து விற்பனையானர்களின் லாபத்தை அடிப்படையாகக் கொண்ட துறை என்று மருத்துவத்தைச் சார்ந்த சிலரே முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதே கருத்துக்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் காந்தியால் முன்வைக்கப்பட்டன. அப்போது அந்தக் கருத்துக்களை முதன்மையாக எடுத்துக் கொள்ளாத இந்தியாவிலுள்ள அறிவு வர்க்கம் இன்று இந்தக் கருத்துக்களுக்கு முதன்மையான இடம் தந்து பேசுகிறது. மேல் நாட்டில் தான் சிறந்த கருத்துக்கள் வர முடியும் என்கிற ஒரு மனோபாவத்தை இது காட்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொன்னேன். நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய வைத்திய முறைகள் அலோபதியா, ஆயுர்வேதமா, ஹோமியோபதியா என்பதைப் பற்றிச் சொல்வதற்கான அடிப்படைத் தகுதிகள் எவையும் எனக்குக் கிடையாது.

நான் கூற வந்த விஷயம் நாம் கொண்டிருக்கும் மோகம். நம் முன்னோர்கள் கூறிய விஷயங்களை உதாசீனம் செய்துவிட்டு, அதே விஷயங்கள் மேல் நாட்டிலிருந்து வரும்போது அவற்றை மிகப் பெரிய விஷயங்களாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை நான் சொல்லுகிறேன். இதே மனோபாவத்தை நீங்கள் பல்வேறு விஷயங்களில் பார்க்கலாம். ?சுற்றுப் புறச்சூழல் இயக்கம் ? என்று ஒன்று இன்று மேல் நாட்டில் உருவாகி வருகிறது. உங்களுடைய சுற்றுப்புறங்களை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிதன் அவசியத்தை இப்போது மிகப் பெரும் அளவுக்கு வற்புறுத்தி வருகிறார்கள். மரங்களை வெட்டக்கூடாது; நெடுஞ்சாலை ஓரங்களில் குடியிருப்பு பகுதிகள் அமைக்கக்கூடாது; நதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்; எந்த ஜீவராசிகளையும் முற்றாக அழித்துவிடக் கூடாது என்று ஒரு இயக்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதே காரியங்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வற்புறுத்தியுள்ளார்கள். காந்தி இதைப் பல தடவை வற்புறுத்தியிருக்கிறார். சுற்றுப்புற சூழ்நிலைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவருடைய எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகின்றன. ஆனால், இது இன்று இயக்கமாக மேல்நாட்டிலிருந்து வரும்போது அதை அப்படியே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அங்கு ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக அந்த இயக்கம் சார்ந்து பல்வேறுவகைப்பட்ட அழுத்தங்கள் அங்கு இருக்கின்றன. நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த இயக்கத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணாமல் அவர்களுடைய சோகங்களை – அவர்களுடைய மனோபாவத்தை – அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

ஆங்கில மொழியினால் நமக்குச் சில வசதிகள் கிடைக்கின்றன. அந்த மொழியினால் சில அவசியத் தேவைகள் நிறைவேறுகிறது. அப்படியானால் அந்த மொழியின் மீது ஏன் மோகம் கொள்ளக்கூடாது ?

ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய ஒரு மொழி என்பது உண்மையான விஷயமல்ல. உலகத்தில் மிகச் சிறுபான்மையான மக்கள் அறிந்த ஒரு மொழிதான் ஆங்கிலம். ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு உங்களுக்கு பிரிட்டிஷ் தீவுகளில் அல்லது அமெரிக்காவில் நீங்கள் சில காரியங்களைச் செய்ய முடியும். நீங்கள் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்தால், சீனாவுக்குச் சென்றிருந்தால் அல்லது ருஷ்யாவுக்குச் சென்றிருந்தால் இந்த ஆங்கிலத்தை நீங்கள் காலணாவுக்குக் கூட அங்கெல்லாம் விற்க முடியாது. அங்கு செல்லுபடியாகாது. நீங்கள் ஆங்கிலம் அறிந்தவர்களா இல்லையா என்பது அங்கெல்லாம் பிரச்சனையே அல்ல. ஆங்கில மொழி சம்பந்தமாக இந்தியர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மயக்கம், அதைத்தான் தவறு என்று கூறுகிறேன்.

ஆங்கில மொழியை மோசமான மொழி என்று நான் சொல்ல வில்லை. ஆங்கில மொழியைக் கற்பதால் நாம் அதிகமான பயன்களை அடைய முடியாது என்றும் நான் சொல்லவில்லை. ஆங்கில மக்களுடன் இருநூறு ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்ட உறவினால் அவர்களிடமிருந்து நமக்கு வந்த கலாச்சாரப் பழக்க வழக்கங்களை நாம் முற்றாக நீக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இரண்டு இனங்கள் ஒன்றுக்கொன்று கூடி வாழும் போது ஒரு இனம் மற்றொரு இனத்திலிருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ளும். வசதியைக் கருதி கற்றுக் கொள்ளும். அதைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பது ஒரு சாதாரண விதி. சிலவற்றை வெளிளையரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம். அவற்றை நாம் தக்க வைத்துக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை.

அறிவு என்பதை ஆங்கிலத்தின் மூலம்தான் பெற முடியும் என்பது உண்மையான விஷயமல்ல. ஒருக்கால் உங்களுக்கு ஆங்கிலம் தெரியாமல் ஜெர்மன் மொழி தெரிந்திருப்பின் அதன் மூலம் பெற முடியும். இன்று முக்கியமாக ஜெர்மன் மொழியும் பிரஞ்சு மொழியும் ஆங்கிலத்துக்கு இணையாக, ஒரு சமயம் ஆங்கிலத்தைத் தாண்டியும் வளர்ந்துவிட்டன. ஆங்கிலத்துக்கும் நமக்கும் இருக்கக்கூடிய உறவுகளில் நாம் கொண்டிருக்கக்கூடிய ஆரோக்கியத்தைப் பற்றி, நேர்மைகளைப் பற்றி நான் சொல்லவில்லை. நாம் அந்த மொழியைச் சார்ந்து நிற்கும் மயக்கங்களைப் பற்றிச் சொல்கிறேன். ஒரு அறிவாளியை அளப்பதற்கு முதன் முதலாக acid test என்று அவருக்கு ஆங்கிலம் தெரியுமா என்றுதான் இன்று பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு மனிதன் பிழையாக ஆங்கிலம் பேசும்போது அவன் மிகுந்த வெட்கமடைகிறான். ஆனால் அவன் பிழையாக தமிழ் பேசும்போது எந்தவிதமான வெட்கத்தையும் அடைவதில்லை. பேசும்போது மட்டுமல்ல எழுதும்போதும் அவன் அடைவதில்லை. இன்று நீங்கள் ஒரு தமிழ் அறிஞரை மதிக்கும்போது அவர் தமிழ் அறிஞர் என்பதற்காக மதிக்கிறீர்களா அல்லது அவர் ஆங்கிலமும் அறிந்த தமிழ் அறிஞர் என்பதற்காக மதிக்கிறீர்களா என்று பார்த்தால் அவர் தமிழ் அறிஞர் என்பதற்கு மேலாக ஆங்கிலமும் அறிந்தவர் என்பதற்காகவே அதிகப்படியான மதிப்பை அவர் பெற முடிகிறது. இப்படி நீங்கள் சிந்தித்துக் கொண்டு போனால் இந்த மொழி சார்ந்து ஒரு பலகீனம், மயக்கம் நமக்கு இருக்கிறது. சாதாரண மக்களிடம் இந்தப் பலகீனம் இன்னும் அதிகமாக இருக்கிறது.

இன்றைய திரைப்படங்களை எடுத்துக் கொள்ளுவோம். ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத ஒரு கதாநாயகன், ஒன்றுக்கும் உதவாதவன் என்று பெண் வீட்டாரால் கருதக் கூடிய ஒரு கதாநாயகன், அவன் கூலி வேலை செய்யக்கூடியவனாகவோ, டாக்சி ஓட்டக்கூடியவனாகவோ இருக்கலாம். அவன் அந்தத் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆங்கிலத்தில் சில வசனங்கள் பேசும் போது எண்ணற்ற பார்வையாளர்கள் கரகோஷம் செய்வார்கள். அந்தக் கரகோஷத்திற்கு அர்த்தம் ?அவன் அறிவாளி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது ? என்பதுதான். இவை நாம் மனரீதியாக எவ்வளவு பெரிய நோயாளியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள். இந்த நோயை நாம் தெரிந்து கொண்டால்தான் விமோசனம் பெற முடியும். இந்த நோய்க்கு நாம் ஆளாகியிருப்பது ஒன்று. இந்த நோய் நமக்கு இருக்கும்போதே இருப்பதை மறுப்பது மற்றொன்று. ஆக இரண்டு நோய்களுக்கு நாம் ஆட்படுகிறோம். இது போன்று பல்வேறு உதாரணங்களைச் சொல்லி நம்மிடம் இருக்கும் மோகத்தை நிரூபிக்க முடியும்.

ஆங்கிலம் தெரியாதவர்கள் மிகப்பெரிய அறிஞர்களாக இருந்தும் கூட ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் உள்ளூர அவர்கள் மிகுந்த வெட்கம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் வெட்கம் அடைவதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். உ.வே.சாமிநாத ஐயரின் பெரிய கவலை தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதாம். அவருக்கு நிகரான பதிப்பாசிரியர்கள் உலக சரித்திரத்தில் இல்லை என்று கூடக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர் தமிழ் மீது மிகுந்த காதல் கொண்டவர். மட்டுமல்ல உலக சரித்திரத்தில் மற்றவர்கள் எப்படிப் புத்தகங்ளைப் பதிப்பித்திருக்கிறார்களோ, வளர்ந்த நாடுகளில் புத்தகங்கள் எப்படிப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவோ அவற்றிற்கு இணையான பதிப்புக்களை உருவாக்கியவர் அவர். பிறரிடம் ஒவ்வொரு விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு பதிப்பித்தவர் அவர். தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை திரும்பத் திரும்ப தன் நண்பர்களிடம் அவர் சொல்லியிருக்கிறாராம். இந்த அவமானத்தை அவருக்கு நாம் ஏற்படுத்தும் போது அதை எண்ணி அவமானப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இதுதான் அந்த மொழி சார்ந்த மோகம். இது ஒரு Symptom. இன்னும் எண்ணற்ற Symptoms. நம்மிடம் இருக்கின்றன. அதை நாம் இன்னும் கூராகப் பார்த்தோமானால் தாழ்வு மனப்பான்மைக்கான காரணங்களாக அவை இருப்பதை அறிய முடியும். இது ஒரு இயற்கையான விஷயம். அபூர்வமான நோயல்ல. உலகத்தில் பல இனங்களுக்கும் இருக்கக்கூடிய தாழ்வு இது. இதைத் தாண்டி வருவதற்கான விஷயங்களைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.

கவிமணி, பாரதி, நாமக்கல்லார் போன்ற கவிஞர்கள் சமுதாயம் சீர்கெட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் இன்றைய எழுத்தாளர்களோ தன்னலத்தோடு செயல்படுகின்றனர். இவர்கள் பெரிய சிக்கலைக் கருவாக எடுத்துக் கொண்டாலும் அதை ஆபாசமாக்கி விடுகின்றனரே. காரணம் சொல்ல முடியுமா ?

நண்பருடைய பேச்சில் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் எனக்கு இல்லை. அவர் இந்தக் கால எழுத்தாளர்களை இன்னும் காரமாகத் தாக்கியிருக்கலாம் என்பதைத் தவிர. மற்றபடி எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்த எழுத்தாளர்கள் ஏன் இந்த மாதிரியான காரியங்களைச் செய்கிறார்கள் என்பதை நீங்களே சொல்லிவிட்டார்கள். அவர்கள் சுயநலம் சார்ந்து ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு இரண்டு விதமான குறிக்கோள்கள் இருக்கின்றன. ஒன்று சமூக அந்தஸ்து. சமூக அந்தஸ்து என்றால் புகழ். மற்றொன்று பணம். இந்த இரண்டு வெற்றிகளைச் சார்ந்து – இந்த வெற்றிகளை எவை ஈட்டித் தருமோ, எந்தவிதமான இயக்கம் உருவாக்கித் தருமோ, அவற்றைச் சார்ந்து – அவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படைக்கிறார்கள் என்பதைவிட அவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இந்த வெற்றிக்கு அவர்கள் பல்வேறு வகைப்பட்ட துறைகளால் அங்கீகரிக்கப்படுகிறார்கள். உண்மையில் தரமற்ற எழுத்தாளர்கள் அல்லது தரமற்ற கவிஞர்கள் அங்கீகரிக்கப்படும் போது ஒரு தயக்கம் ஏற்படுகிறது. மிகத் தரமற்ற ஒரு நாவலாசிரியர் மிகப் பெரிய பரிசைப் பெறும்போது அவரைத் தரமற்றவர் என்று நிரூபிப்பதில் கஷ்டம் இருக்கிறது.

பெரிய நிகழ்ச்சிகள் நிகழும்போது ஒரு இனம் தனக்குரிய அவநம்பிக்கைகளை அல்லது தாழ்வு மனப்பான்மையை உதறிக் கொண்டு சிலிர்த்து எழுகிறது. அப்படி மற்ற இனங்களுக்குச் சில சாதனைகள் நடந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளருக்கு நோபல் பரிசு கிடைக்கிறபோது அந்த இனம் வாழ்க்கைமீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்கிறது. உலகம் பார்த்து மெச்சக்கூடிய எந்தக் காரியத்தையும் நாம் இலக்கியத்திலோ சினிமாவிலோ செய்யவில்லை. அரசியல் சார்ந்த கருத்துக்களையோ சமூக ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்களையோ குறைந்த பட்சம் நமக்கு இரண்டாயிரம் வருடம் பழக்கம் உள்ள கவிதை சார்ந்த துறையிலோ உலகத்துக்கு இன்று வரையிலும் நாம் எவற்றையும் அளிக்கவில்லை. ஆகவே தான் நாம் தாழ்வு மனப்பான்மை கொண்டுவிட்டோம் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

துறையைத் தேர்ந்தெடுப்பதில் பிறரது அறிவுறைகளையோ தாக்குதலையோ பொருட்படுத்த வேண்டாமா ?

ஒரு துறையைத் தேர்ந்தெடுத்த பின் அதில் இயங்குவது விரும்பத்தக்க விஷயம்தான். ஆனால் நம் சமூகப் பின்னணி சார்ந்த ஏதோ ஒரு காரணத்திற்காக சரியான வழிகாட்டல் நமக்குக் கிடைக்காமல் போகலாம். அது குடும்பம் சார்ந்தோ அல்லது உறவினர்கள் சார்ந்தோ அல்லது நண்பர்கள் சார்ந்தோ அல்லது ஆசிரியர்கள் சார்ந்தோ நமக்குக் கிடைக்காமல் போகலாம். அதனால் சில சந்தர்ப்பங்களில் நாம் தவறான துறையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பினால் நாம் சில பட்டங்களைப் பெற்ற பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் இருபது, இருபத்திரண்டு வயதில் அதிக வயதை நாம் அடைந்துவிட்டோம் என்றும் இந்தத் துறையை மாற்றிக் கொண்டு மற்றொரு துறையை நாம் தேர்ந்தெடுத்து அதில் திறமை பெறுவது அசாத்தியமான காரியம் என்ற எண்ணம் மாணவர்களுக்கு ஏற்படுவது இயற்கை. இது போன்ற ஒரு எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. கல்லூரியில் நாம் தவறான ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தாலும் கூட வாழ்க்கையில் நம்முடைய ருசிகளுக்கு ஏற்ற துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் பயிலக்கூடிய வாய்ப்பு இன்று இருக்கிறது. அந்த வாய்ப்பு மாணவர்களுக்கு அவசியம் என்றால், விமர்சனங்களுக்கு ஆட்பட்டாலும் கூட – அவர் தனது ருசிக்கு ஏற்ப துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள பின் வாங்கக்கூடாது என்று நினைக்கிறேன். உங்களைப் பொறுத்த வரையில் நீங்கள் சரியான துறைகளைத்தான் தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்றால் நீங்கள் அந்தத் துறையைத் தொடரலாம். ஏதோ ஒரு காரணத்திற்காக நமக்குத் துறைகள் சரியாக அமையவில்லை என்று வாழ்நாள் முழுவதும் விசனப்பட்டுக் கொண்டிருப்பதைவிட நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்த நேரத்தில் நம்முடைய துறைகளை மாற்றிக் கொள்வது மிக முக்கியமான விஷயமாக எனக்குப்படுகிறது.

இன்று புதுக்கவிதை வளர்ந்த நிலையில்தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் தமிழிற்கு ஒரு சரியான இடம் இல்லாமல் போகவில்லையே ?

நான் புதுக்கவிதையைப் பற்றி சாதகமாகவோ பாதகமாகவோ எந்தக் கருத்தையும் என்னுடைய பேச்சில் கூறவில்லை. மு.வ. ?இலக்கியத் திறன் ? என்ற தனது புத்தகத்தில் புதுக்கவிதையை வரவேற்று எழுதக்கூடிய அளவுக்கு இன்றைய நவீன இலக்கியப் போக்குகளை அறிந்து வைத்திருக்கிறார் என்று பாராட்டினேன்.

பொதுவாக ஒரு மொழி இரண்டாம் பட்சமான படைப்புக்களால், அவை நாவல்களாக இருந்தாலும் சரி, சிறுகதையாக இருந்தாலும் சரி, கவிதையாக இருந்தாலும் சரி, ஒரு மொழி தன்னுடைய வலிமைகளை இழந்து கொண்டிருக்கும். முதன்மையான படைப்புக்களால் மிகத் தரமான படைப்புக்களால் மொழி வளர்ச்சி அடையும். நம்முடைய மொழி நம்முடைய சிறந்த கவிஞர்களால், சிறந்த நாவலாசிரியர்களால், சிறந்த சிறுகதை ஆசிரியர்களால், சிறந்த கட்டுரை ஆசிரியர்களால் நன்றாக வளர்க்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் நம்மிடமோ இரண்டாம் பட்சமான அல்லது மூன்றாம் பட்சமான கவிஞர்களும், நாவலாசிரியர்களும், சிறுகதை ஆசிரியர்களும் எண்ணிக்கையில் அதிக அளவு இருக்கின்றனர். அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் நிறுவனங்களின் ஆதரவும் கிடைக்கிறது. அவர்கள் மொழியை மலினப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் தமிழ் மொழி சம்பந்தமாக நாம் எதிர் கொள்ளக் கூடிய நிலையாக இருக்கிறது.

நமக்கு இருக்கின்ற ஆங்கில மோகத்தால் தான் நாம் தமிழை உண்மையில் மதிக்காமல் இருக்கின்றோமா ?

ஆங்கில மோகம் ஏற்படுவதற்கு மாணவர்களை நான் குறை சொல்லவில்லை. மாணவர்கள் இந்த குறைகளுக்கு ஆட்பட்டுவிடக்கூடாது என்ற கவலையினால்தான் உங்களை provoke செய்யக்கூடிய, அல்லது உங்களை தொந்தரவு பண்ணக்கூடிய, நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுக்கக்கூடிய பல கருத்துக்களை முன் வைத்தேன். மாணவர் சமுதாயம் இன்று இருக்கக்கூடிய பல்வேறு குறைகளுக்குப் பலியாகி விடக்கூடாது என்று நினைக்கிறேன். இன்று ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பள்ளிகள், ஆங்கிலத்தின் மீது நாம் கொண்ட மோகத்தையே காட்டுகின்றன. வெளியே தமிழின் பெருமை பேசுதல், அதே சமயம் ஆங்கிலத்தை உள்ளூர மதித்தல் இதுதான் நம்முடைய கலாச்சார தலைமையின் இரட்டைக் குணம். நம்முடைய அரசியல் தலைமையின் இரட்டைக் குணம். இந்த குணத்தைக் கொண்டவர்கள் தான் இந்தச் சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலக் கல்விக்கு அளிக்கக்கூடிய முக்கியத்துவத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் தெரியும். இவர்களுடைய மரியாதை தமிழ் சார்ந்து இல்லை என்பதற்கும் ஆங்கிலம் சார்ந்து தான் இருக்கிறது என்பதற்கும் எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். நாம் கடந்த ஐம்பது வருடங்களில் தமிழைப் பற்றி உயர்வாகப் பேசியது உண்மையென்றால் நாம் பல்வேறுபட்ட காரியங்களைச் சாதித்திருக்க வேண்டும். ஆனால் சொல்லும்படியான மிகப்பெரிய காரியங்கள் எவற்றையும் நாம் சாதிக்கவில்லை. தமிழன் பெருமை பேசுவதே சில அரசியல் காரணங்களுக்காக, சில சமூகக் காரணங்களுக்காக. இதை ஒரு தந்திரமாகக் கொண்டிருக்கிறோம். இந்த இனம் தன்னுடைய தாழ்மையைப் பற்றி உள்ளூர வருந்தவில்லை என்பதற்கான தடயங்கள் தான் எனக்கு அதிகமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைய கலாச்சார வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக எதைச் சொல்ல முடியும் ?

முக்கியமான காரணம் தமிழ் நாட்டில் போலிகளுக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரம் என்று சொல்லலாம். ஒரு சமுதாயத்தில் எல்லா தரத்தைச் சார்ந்த மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்த மக்கள் மட்டும் வாழக்கூடிய சமுதாயம் என்று எதுவுமே இல்லை. செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு தரத்தைச் சார்ந்த செயல்பாடுகள் ஒவ்வொரு சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும். மிக உயர்வானதும் இருக்கும்; நடுத்தரமானதும் இருக்கும். மிகக் கீழானதும் இருக்கும். ஆனால் ஒரு விவேகமான சமூகம் உயர்வான செயல்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. அதைப் போற்றுகிறது. பாராட்டுகிறது. இரண்டாம் பட்சமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மூன்றாம் பட்சமான அல்லது முப்பதாம் பட்சமான செயல்பாடுகளைக் கண்டிக்கிறது. இதன் மூலம் மதிப்பீடுகளை ஒரு விவேகமான சமூகம் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. எனவே இந்தச் செயல்பாடுகள் இருப்பது வீழ்ச்சிக்கு காரணம் அல்ல. தரக்குறைவான செயல்பாடுகள் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. தரக்குறைவான காரியத்துக்கு நாம் கொடுக்கக் கூடிய சமூக அங்கீகாரம் சமூக மதிப்பு வீழ்ச்சியினுடைய அறிகுறி என்று நான் கருதுகிறேன்.

மூன்றாம்தர எழுத்தாளரை முதல் தரமான எழுத்தாளராக ஒரு சமூகம் கருதுமென்றால், பல்கலைக்கழகம் கருதுமென்றால், அறிவாளி வர்க்கங்கள் கருதுமென்றால், அரசாங்கம் கருதுமென்றால், அரசியல்வாதிகள் கருதுவார்கள் என்றால் அந்த சமூகம் விவேகமான மதிப்பீடுகளை, அளவுகோல்களை இழந்து விட்டது என்றுதான் அர்த்தம். மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கக்கூடிய ஒரு சமூகத்தில் மிக மோசமான நடிகர்களை மிகச் சிறந்த நடிகர்களாக ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்றால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த அறிவாளிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்றால், நடிப்பைச் சார்ந்த அளவுகோல் முறிந்து போகிறது என்று அர்த்தம். இதுபோன்ற ஒரு வீழ்ச்சி தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் பிற துறைகள் சார்ந்தும் மூன்றாம் தரமானவற்றை முதல் பட்சமாக முன் வைக்கும் காரியம், முதல் பட்சமானவற்றை முற்றாக நிராகரித்து விடும். இந்த இரண்டு காரியத்தையும் இந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருகிறது. ஆகவே இது ஒரு பெரிய வீழ்ச்சி என்று நம்புகிறேன்.

இன்றைய தரமான எழுத்துக்கள் படிப்பதற்கு எளிமையாக இல்லையே. உங்கள் காலச்சுவடு கூடத்தான். . .

மிகச் சிறப்பான எழுத்து சற்றுக் கடினமாக இருக்கலாம். மிகச் சிறப்பான எழுத்து எளிமையாகக் கூட இருக்கலாம். கடினம் என்பது இலக்கிய அளவுகோல் அல்ல. இது கடினமாக இருக்கிறது; ஆகவே உயர்வானது என்று சொல்ல முடியாது. இது எளிமையாக இருக்கிறது; ஆகவே இது தள்ளுபடியானது என்று சொல்ல முடியாது. இரண்டு விதமாகவும் படைப்புக்கள் இருக்கலாம். எளிமையாக இருக்கிறதா ? அல்லது கடினமாக இருக்கிறதா ? என்பதைப் பற்றி முன்கூட்டியே எண்ணங்களைக் கொண்டு அந்த எண்ணங்களின் அடிப்படையில் நான் இலக்கியப் புத்தகங்களை மதிப்பிடுவதில்லை. நம்முடைய இதிகாசங்களான மகாபாரதமும், இராமாயணமும் மிக எளிமையானவை. James Joyce இன் Ulysses மிகக் கடினமான புத்தகம். Franz Kafkaவும் சுலபமான ஆசிரியர் அல்ல. இவை எல்லாமே இலக்கியத் தரமானவை என்றே நான் கருதுகிறேன். இதில் ஒன்று போதும். மிக எளிமையானது மட்டும் போதும்; கடினமானவை வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்கிற மனோபாவத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நாவலாசிரியர்கள் அல்லது கவிஞர்களின் படைப்புக்களை கடினம் என்று வாசகர்களாகிய நாம் கூறுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. இதற்கு முன் எந்தக் காரியங்கள் சொல்லப்பட்டனவோ அதே விஷயங்கள் இந்த நாவலிலோ கவிதைகளிலோ சொல்லப்படவில்லை. இதுகாறும் சொல்லாத மிகச் சிக்கலான விஷயங்களை அவர்கள் சொல்ல முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சிகளில் வெற்றிகள் அடைகிறார்கள். இதன் மூலம் உங்கள் மொழி மிக நுட்பமான ஆற்றல்களை அடைகிறது. இன்று பல நுட்பமான கருத்துக்களை நம் மொழியில் நாம் சொல்கிறோம் என்றால் நம் மொழியை மிகக் கூர்மையாக படைப்பாளிகள் வளர்த்திக்கொண்டு வருவதால்தான் நம் மொழியை நாம் பல்வேறு வகைப்பட்ட வளர்ந்துவரும் துறைகளுக்குப் பயன்படுத்த முடிகிறது. மகாபாரத மொழி மட்டுமே நமக்கு இருக்குமென்றால் இன்று உலகத்தில் தோன்றக்கூடிய பல கருத்தாக்கங்களை நாம் சென்றடைய முடியாது.

காலத்தின் கோலத்திற்கு ஏற்ப, விரிந்து வரக்கூடிய அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப, புதிய துறைகளின் அறிமுகத்திற்கு ஏற்ப, நம்முடைய புத்தகங்கள் நம்மளவில் கடினமாகிக் கொண்டு போகக்கூடிய வாய்ப்புகள் மிகுதியாக இருக்கின்றன. இதையும் ஒரு தவிர்க்க முடியாத விதியாகக் கொள்ள வேண்டும். அந்தப் புத்தகங்களிடம் நமக்கு உள்ள உறவை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த உறவுகளை நல்ல முறையில் நாம் பேண வேண்டும். கடினமான புத்தகங்களை நாம் படித்து அதிலுள்ள சாராம்சங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்றால் இதற்கு முன்னால் நமக்கு இலக்கியத்திலிருந்து கிடைக்காத ஒருவகை அனுபவம், ஒரு பேரனுபவம், அனுபவத்தின் ஒரு புதிய பரிணாமம் அந்தப் புத்தகங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும். அந்த வாய்ப்பைக் கடினம் என்று சொல்லி நாம் இழந்து விடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய இதழான காலச்சுவடு உங்களால் போதிய அளவுக்குப் படிக்க முடியாமல் இருக்கிறது என்றால் இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அதை எழுதக்கூடியவர்கள் போதிய அளவுக்கு எளிமையாகச் சொல்லத் தெரியாதவர்களாக இருக்கலாம். அல்லது அவர்கள் சொல்லுகிற விஷயங்களைச் சார்ந்து உங்களுக்கு முன் பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். இந்த காரணங்களைச் சார்ந்து அது கடினமாக அமையும். ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள் சார்ந்து உங்களுக்கு பழக்கம் இருக்குமேயென்றால் அதில் வரக்கூடிய கட்டுரைகளை நீங்கள் புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு இருக்கும். அப்படி உங்களுக்கு பழக்கம் இருந்தும் அந்த கட்டுரைகளோ அல்லது கவிதைகளோ உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது அநேகமாக சொல்லியவர்களுடைய குறையாகக் கருதலாம். இரண்டு வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஒருவன் படிப்பினால்தான் நிறைவான வாழ்க்கையை அடைய முடியுமா ? இன்றைய காலகட்டத்தில் படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது என்பது முடியாத செயலாக இருக்கிறதே.

வாசிப்பு என்பது முக்கியமான ஒன்று என்று சொன்னேன். ஆனால் அதை ஒரு கட்டாயமான விதியாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. அது முக்கியமாக ஒரு தவிர்க்க முடியாத விதி அல்ல. நீங்கள் படிக்கலாம். படிக்காமல் கூட இருக்கலாம். படிக்காமலேயே நிறைவான வாழ்க்கை வாழ்ந்த பல்வேறு நபர்களை எனக்குத் தெரியும். எந்த ஒரு புத்தகத்தையும் படிக்காமல் – ஒரு தினசரியைக் கூடப் படிக்காமல் – சந்தோஷமான நிறைவான வாழ்க்கையை தங்களவில் வாழ்ந்தவர்களை எனக்குத் தெரியும். ஆனால், இன்றைய வாழ்க்கையை வாழ்க்கையின் வேறு பரிமாணங்களைப் புத்தகங்களின்றி நாம் எதிர்கொள்ள முடியாதோ என்ற சந்தேகம் எனக்குப் பலமாக இருக்கின்றது.

நேரம் ஒதுக்குவது என்பது உங்கள் ஆர்வங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். நாம் பல்வேறு துறைகளைப் பற்றிப் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் நமக்கு நேரம் இல்லாமல் போகலாம். ஆனால் அதைவிட மிக முக்கியத்துவம் குறைந்த பல்வேறுபட்ட விஷயங்களுக்கு நேரம் செலவிட வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது அரசாங்கத்துக்கும் உங்களுக்குமான உறவுகள் சார்ந்த காரியங்கள், நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் உறவைச் சார்ந்த காரியங்கள், உங்கள் உறவுகளைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள், உங்கள் குடும்பத்தைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள், உங்கள் நண்பர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் – இப்படி எண்ணற்ற காரியங்களில் நீங்கள் பொழுதைச் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள். இவற்றில் ஒரு பொழுதை மிச்சப்படுத்தி நீங்கள் விரும்பக்கூடிய மிக உன்னதமான புத்தகங்களைப் படிக்க முடிந்தால் அந்த அளவுக்கு வாழ்க்கைப் பார்வை விரிவடையும் என்று நம்புகிறேன்.

இந்த நூற்றாண்டில் தமிழில் மிகச்சிறந்த கலைஞர்கள் யாவர் ?

இந்த நூற்றாண்டில் மிகச் சிறந்த கலைஞர்களாக நான் இருவரை மதிக்கிறேன். ஒருவர் பாரதி. மற்றொருவர் புதுமைப்பித்தன். இவர்களின் புத்தகங்களையேனும் மாணவர்கள் முழுமையாகப் படிக்க வேண்டும். இந்த அனுபவங்களுக்கு அவர்கள் ஆளானால் அதுவே பெரிய விஷயம். ஒரு முக்கியமான விஷயம். இதை ஆரம்பமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டுள்ள முக்கியமான மற்ற புத்தகங்களைப் படிக்கலாம். சிறந்த புத்தகங்கள் ஏராளமாகத் தமிழில் இருக்கின்றன. அவற்றை நீங்கள் படித்துப் பார்ப்பது அவசியமென்று நம்புகிறேன். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நூறு புத்தகங்களையேனும் குறைந்தபட்சம் படிக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகங்களை நீங்கள் சுலபமாகப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பான்மையான புத்தகங்கள் உங்கள் நூல் நிலையங்களில் இருக்கக் கூடியவைதான். எந்தவிதமான கஷ்டத்துக்கும் நம்மை ஆட்படுத்தாமல் மிகப் பெரிய செல்வங்கள் நம்மை வந்தடையக்கூடிய ஒரு வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். அந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

படைப்பாளிகளில் இரண்டாந்தர படைப்பாளியை எந்த அளவுகோலை வைத்து மதிப்பிடுகிறீர்கள் ?

இப்போது பல்வேறு வகைப்பட்ட அளவுகோல்கள் இருக்கின்றன. முக்கியமாக ஒரு அளவுகோல் ஒரு படைப்புக்கும் காலத்துக்குமான உறவு. ஒரு எழுத்தாளன் அவனுடைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நவீன மனிதனாக இருக்க வேண்டும். அவனது உடல் இன்று வாழ்கிறது என்ற காரணத்திற்காக அவனை இந்த நூற்றாண்டு மனிதனாகக் கருதி, கருத்துலகம் சார்ந்து, அனுபவ உலகம் சார்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

இன்று வந்து கொண்டிருக்கிற பெரும்பான்மையான புத்தகங்களும் படைப்புக்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவை. ஆக ஒரு படைப்பாளிக்கும் இந்த காலத்திற்கும் இருக்கக்கூடிய உறவு நிலை காலத்தால் அவன் பெற்ற பாதிப்புகள், அந்தப் பாதிப்புகள் மூலம் தன்னை நவீன மனிதனாக அவன் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிறைவு, இவைதான் படைப்புக்கு அடிப்படையான கூறுகள் என்று நினைக்கிறேன். இதைச் சார்ந்து பல்வேறுபட்ட கூறுகள் இருக்கின்றன. மொழியை அவன் எப்படிப் பயன்படுத்துகிறான் ? சிக்கனமாகப் பயன்படுத்துகிறானா ? மொழியை விரயம் செய்கிறானா ? மிகப்பெரிய அனுபவங்களை அவனால் அறிய முடிகிறதா ? பல்வேறுபட்ட அர்த்தப் பரிமாணங்களை அந்த படைப்புக்களால் தர முடிகிறதா ? உண்மையென்று முற்றாக நம்பக்கூடிய, நம்பச் செய்துவிடக்கூடிய ஒரு கற்பனை வளத்தை அவன் கொண்டிருக்கிறானா ? மீண்டும் மீண்டும் அந்தப் படைப்பை அணுக வேண்டும் என்ற வற்புறுத்தல் அந்த படைப்பு நமக்குத் தருகிறதா ? நம்முடைய கவனத்தை முழுமையாக அந்தப் படைப்புக் கேட்டு நிற்கிறதா ? அல்லது அரைத் தூக்கத்திலேயே அந்தப் படைப்பைப் படிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறதா ? என்பது போன்ற பல்வேறுபட்ட அளவுகளை வைத்து உயர்ந்த படைப்புக்கும் இரண்டாம் பட்சப் படைப்புக்குமான வேற்றுமைகளைக் கண்டு கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

^^^^