பொது - இலக்கியக் கலைச்சொற்கள்


https://www.jeyamohan.in/182/


அக ஒளி Enlightenment படைப்பில் உருவாகும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட முழுமைநோக்கு

அகவயம் : Subjective ஒருவரின் அகம் சார்ந்தது, தனிப்பட்ட முறையிலானது. அந்தரங்கமானது

அகமொழி Langue பண்பாட்டின் உள்ளுறையாக உள்ள மொழிக்கட்டுமானம். புறமொழிக்கு கொடுக்கச் சாத்தியமான அர்த்தங்களினால் ஆனது அது. அதுவே கேட்கும்மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது.

அங்கதம் :Satire கேலிப்படைப்பு

அடித்தளம்: Base மார்க்ஸிய நோக்கில் சமூகத்தின் பொருளியல் அமைப்பு. உற்பத்தி வினியோகம் இரண்டும் அடங்கியது

அடுக்கதிகாரம்: Hierarchy அதிகாரம் ஒன்றுக்குமேல் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு

அணியியல் Rhetorics படைப்பின் மொழியில் செய்யப்படும் அலங்காரங்களைப்பற்றிய துறை

அபுனைவு Non fiction புனைவல்லாத எழுத்துக்கள்

அன்னியமாதல் Alienation பொதுவான போக்கு மற்றும் மையப்போக்கில் இருந்து விலகிச்செல்லுதல். மார்க்ஸிய நோக்கில் உற்பத்தின் படைப்புத்தன்மையிலிருந்து பாட்டாளி மனவிலக்கம் கொள்ளுதல். இருத்தலியல் நோக்கில் மனிதன் அடிப்படையான இயற்கைசக்திகளிடமிருந்து விலகுதல்

அமைப்பு Structure கட்டுமானம். சமூகக்கட்டுமானம் மொழிக்கட்டுமானம் ஆகியவற்ரைக் குறிக்கிறது இச்சொல்

அருவம்: Abstract திட்டவட்டமான உருவம் அற்றது. நுண்மம் என்பது மேலும் பொருத்தமான சொல்

அழகியல் Aesthetics அழகை உருவாக்கும் இயல்புகளைப்பற்றிய துறை . வடிவங்கள், கூறுமுறைகள் ஆகியவற்றின் அமைப்¨ப்பபற்றிய ஆய்வு.

அறிவொளிக்காலம் Age of enlightment ஐரோப்பாவில் கலை இலக்கியம் சார்ந்த நுண்ணுணர்வு உருவான காலகட்டம்

அறிவுக்குவியம் Episteme அறிவின் முதற்கட்ட வடிவம். அறிவின் அடிப்படை அலகு. அறிவுக்கூறு என்ற சொல்லாட்சியும் உண்டு

அனுபவ வாதம் Empiricism புலன்களுக்கு முன் நிரூபிக்கக் கூடியதே உண்மை என்று கூறும் அணுகுமுறை. புலனறிவாதம், நிரூபணவாதம் என்ற சொற்களும் உண்டு

அனுமானம் Inference அறிந்தவற்றிலிருந்து அறியாதவை பற்றி செய்யப்படும் ஊகம்.

ஆதிக்கக் கருத்து Hegemony ஒரு சமூகச் சூழலில் மேலாதிக்கம் செலுத்தும் கருத்தியல். கருத்ததிகாரம் மேலும் சரியான சொல்

ஆதிக்கவிருப்புறுதி Will to power பிறவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற விருப்பமும் வேகமும். இது மனிதர்கல் அனைவரையும் இயக்கும் அடிப்படை விசை என்பது பின்நவீனத்துவ காலகட்ட உளவியலிஒன் கோட்பாடாகும்.

ஆவணக்கிடங்கு Archives பழைய ஆவணங்களின் சேமிப்பு. ஆவணக்காப்பகம் என்பது மேலும் பொருத்தமான சொல்

ஆழ்மனம் Sub conscious சிந்தனைகளினால் ஆன மேல்மனத்திற்கு அடியில் மறைந்துள்ள மனம். கனவுகளில் வெளிப்படுவது. ·பிராய்டின் உளப்பகுப்பில் ஒரு முக்கியமான உருவகம்

ஆளுமை Personality ஒரு மனிதனின் குணாதிசயங்களின் தொகுப்பு.

ஆளுமைப்பிளவு Schizophrenia மனித ஆளுமையின் ஒருங்கிணைவு சிதறும் ஒரு உளச்சிக்கல். இலக்கியத்தில் இது முக்கியமாக கவனிக்கப்படுகிறது. மனம் என்றால் என ஆளுமை என்றால் என்ன என்ற வினாக்களை எழுப்புவதர்கு உதவுகிறது.

ஆளுமைப்பிளவு நாவல் Schizophrenic novel ஆளுமைப்பிளவை வெளிப்படுத்தும் நாவல். நகுலன் டைரி’ நகுலன் எழுதிய முக்கியமான ஆளுமைப்பிளவு நாவல்

இயங்காற்றல் Dynamism செயலூக்கம் கொண்ட நிலை

இயற்காட்சி Phenomenon திட்டவட்டமான பொருள்கொண்ட ஒருநிகழ்வு.

இருப்பு Existence மனிதர்கள் தாங்கள் இருக்கிறோம் என தாங்கள் உணரும் நிலை. ஒரு தத்துவக் கலைச்சொல்.

இருத்தலியம் Existentialism மனிதர்களின் இருத்தலின் சாரமென்ன என்று ஆராய்ந்த இருபதாம் நூற்றாண்டு சிந்தனைமுறை. மனிதன் இயர்கைச் சக்திகலிடமிருந்து அன்னியப்பட்டு தன்னை தானாக உணரும்போது துயரும் தனிமையும் கொண்டவன்மாகிறான், அவன் வாழ்க்கைக்கு பொருளில்லாமலாகிறது அதிலிருந்து அவனுக்கு மீட்பு இல்லை என்று வாதிட்டது இது

இருபொருள்வாதம் Dualism எதையும் இரண்டாகப்பிரித்து ஆராயும் நோக்கு. மனம் – அறிவு, இயற்கை- மனிதன் இவ்வாராக. இது மதத்திலிருந்து தத்துவத்திற்கு வந்த நோக்கு

இலக்கியத்தன்மை Literariness படைப்பின் இலக்கிய அம்சம் மேலோங்கியிருத்தல். பொதுவாக வாசக கற்பனைக்கு அதிக இடம் கொடுக்கும் படைப்பு இலக்கியத்தன்மைமிக்கது எனப்படுகிரது

இலட்சியவாதம் Idealism பெரும் இலக்குகளை முன்வைத்து செயல்படும் வாழ்க்கை நோக்கு

இறையியல் Theology இறைக்கோட்பாடு பற்றிய தர்க்கங்கல் அடங்கிய அறிவுத்துறை.

இன்மை Absence ஒன்றின் இல்லாமை. இருப்பு போலவே இல்லமையும் கருத்துத் தளத்தில் ஒரு முக்கியமான விஷயமே

உருவம் Form ஒரு படைப்பின் அல்லது கூற்றின் மொழி வடிவம். அதை உருவாக்குபவனால் அளிக்கப்படுவது

உருவவியல் Formalism படைப்பு என்பது ஒரு வகை மொழியுருவமே என்று எடுத்துக்கொண்டு உருவத்திந் நோக்கம் இயல்பு அமைப்புமுறை ஆகியவற்றை ஆராயும் ஒரு மொழியியல் கோட்பாடு.

உள்ளொளி Insight படைப்பாளி அல்லது தத்துவவாதி தன் தனிப்பட்ட இயல்பால் கொண்டுள்ள உண்மை அறியும் திறன்.

உளவியல் Psychology மனித மனத்தை ஆராயும் செய்யும் அறிவியல்துறை

உளப்பகுப்பாய்வு Psychoanalyses வெளிமனத்தை ஓயவைத்து ஆழ்மனங்களை வெளியே கொண்டுவரும் ஆய்வுமுறை. மனித மனத்தை வெளிமனம் ஆழ்மனம் நனவிலி மனம் எனப் பிரித்து நோக்கும் ·ப்ராய்டிய கோட்பாட்டின் செயல்முறை இது

உன்னதம் sublime ஒன்றின் உச்ச நிலை வெளிப்பாடு

ஊடகம் Media மொழி மற்றும் குறிகள் மூலம் மனிதர்கள் தொடர்புகொள்ளும் வழி. இதழ்கள், நூல்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் அனைத்துமே

ஊடகவியல் Media science ஊடகங்களைப்பற்றிய ஆய்வுகளைச் செய்யும் அறிவுத்துறை

ஊடுபாவு Texture ஒரு நூலில் பல கூறுகள்மிணைந்து பரவியிருக்கும்தன்மை. நூலிழைப்பின்னல் என்றும் சொல்லாட்சி உண்டு

ஊடுபிரதித்தன்மை Intertextuality ஒரு நூலுக்குள் பல நூல்கள் தொடர்புகொண்டிருத்தல். பல நூல்களை தொட்டுச்செல்லும் நூலியல்பு.

எதிர்வினை Response ஒரு செய்தித்தொடர்புக்கு வரும் மறு தொடர்பு. படைப்புக்கு வாசகன் அளிக்கும் எதிர்வினை மிக முக்கியமாக நவீன விமரிசனத்தில் கவனிகப்படுகிறது

எழுத்தியல் Grammatology எழுது முறைகளைப்பற்றிய அறிவியல்

எதிர்காலவாதம் Futuristic எதிர்காலத்தைப்பற்றிய தர்க்கபூர்வ நோக்கு

எதிர்கதைத்தலைவன் Anti hero கதையில் வரும் எதிர்மறையான மையக்கதாபாத்திரம்.,வில்லன்

எதிர்மறை Negative மாறான கருத்து அல்லது தரப்பு

ஏற்புக்கொள்கை Reception theory படைப்பின் வடிவ இயல்புகளை வாசகன் வாசிக்கும் விதத்திலிருந்து உருவகிக்கும் அழகியல்முறை.

ஒருமை Unity படைப்பில் வரும் ஒத்திசைவு

ஒலிசார்ந்த Phonemic சொல்லின் ஒலி சார்ந்து அறிதல்

ஒலிபெயர்ப்பு Transliteration பொருளுக்குப் பதிலாக ஒலியை மட்டும் இன்னொரு மொழிக்கு மாற்றுதல்.

ஒலிமையவாதம் Phonocentrism மொழியை ஒலியை அதாவது உச்சரிப்பை மையமாகக் கொண்டு பொருள்கொள்ளும் போக்கு. அமைப்பியல் திறனாய்வின் ஒரு கலைச்சொல்.

ஒலியியல் Phonetics சொற்களின் ஒலி அல்லது உச்சரிப்பு குறித்த துறை

கதாபாத்திரம் Character கதையில் வரும் மனிதர். கதைமாந்தர் என்றும் சொல்வதுண்டு

கதைப்பாடல் Ballad கதையை நீண்ட பாடலாகப் பாடும் நாட்டார் மரபு வடிவம்.

களியாடல்கோட்பாடு ஒரு திருவிழாக்களம் போல பலவகையான கூற்றுகளும் அர்த்தங்களும் கட்டுபபடில்லாமல் ஒலிக்கும் சொல்வெளியே இலக்கியப் படைப்பு என்ற கோட்பாடு. ருஷ்ய மொழியியலாளர் மிகயீல் பக்தின் முன்வைத்தது

கற்பனாவாதம் Romanticismமுணர்ச்சிகளை உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் கலைநோக்கு

கருத்துப்பூசல் Polemics கருத்துக்களின் பொருட்டு நடக்கும் தனிநபர் பூசல்.

கரு Theme கதையின் மைய எண்ணம்

கருத்துருவகம் Allegory ஒரு திட்டவட்டமான பொருளைச் சுட்டும் பொருட்டு உருவாக்கப்பட்ட இன்னொரு பொருள் அல்லது அமைப்பு அல்லது கூற்று.

கதைத்தொடர் Saga தொடர்ச்சியாகச் சொல்லப்படும் கதைகள்

கருத்துமொழி Aphorism ஒரு கருத்தை சுருக்கமாகவோ வேடிககியாகவோ கவித்துவமாகவோ சொல்லும் ஒற்றைச் சொற்றொடர் கூற்று

கண்ணாடிப்பருவம் Mirror stage குழந்தை தன்னை கண்ணாடியில் பார்த்து தான் என அறியும் நிலை. சுயம் உருவாகும் முதல் அப்டி. பதினாறுமுதல் பதினெட்டு மாதங்களுக்குள் இது நிகழ்கிறது. ழாக் லக்கான் என்ற அமைப்பியல் உளவியலாளரின் கோட்பாடு இது

கருத்தாக்கம் Concept ஒரு கருத்தை தர்க்கபூர்வமாக வகுத்துக்கொள்ளும் நிலை

கருத்துமுதல்வாதம் Idealism கருத்தே முதன்மையானது அதன் புற வெளிபபடே பொருள்வய உலகம் என நம்பும் தத்துவ நிலைப்பாடு

கருதுகோள் Conception ஒரு கருத்தை ஒட்டுமொத்த சிந்தனைக்கான முன்வரைவாக உருவகித்தல்

கவிதையியல் Poetics கவிதையின் இயல்புகளை ஆராயும் துறை

கவியுருவகம் Metaphor இலக்கியத்தில் இச்சொல் ஒரு வாசகன் குறிப்பான ஒரு அர்த்தத்தை நோக்கிச் செல்லும்படியாக அமைக்கபப்ட்டுள்ள அல்லது வெளிபப்டையாகச் சொல்லப்ப்ட்டுள்ள ஓர் உருகவத்தை குறிக்கிறது

காட்சிக்கோணம் Perspective கருத்துக்களை அணுகுமுறை

குலம் Clan பொதுவான பிறப்படையாளம் கொண்ட மக்கள் குழு

குலக்குறி Totem ஒரு குலம் தனக்கென கொண்டுள்ள குறியீட்டு அடையாளம்

குறுநாவல் Novelette நாவலுக்குரிய விரிவும் சிறுகதைக்குரிய க்ச்சிதமான ஒற்றைக்கதையும் கொண்ட சுருக்கமான அவ்டிவம்

குலப்பாடகன் Bard குலத்தின் வெற்றிக¨ளையும் குலவரிசையையும் பாடும் பாடகன். கவிஞனுக்கு முன்னோடி

குறியாக்கம் Encode எழுத்துகக்ளாலும் அடையாளங்களாலும் குறிகளை உருவாக்குதல். எழுதுவதும் சரி போக்குவரத்துக் குறிகளைப்போடுவதும் சரி ஒரேவகையானவையே. இவையே குறியாக்கம் எனப்படுகின்றன

குறி Sign பிறிதொன்றைச் சுட்டும் ஒன்று. எழுத்து, சொல் எல்லாமே குறிகள்தான். மொழி என்பது குறிகளின் தொகுப்பு . மொழியியல்சார்ந்த கலைச்சொல்

குறிப்பான் Signifier ஒரு குறியில் குறிப்புணர்த்தும் செயலை செய்வது எதுவோ அது .

குறிப்பீடு Signified ஒரு குறியில் குறிப்புணர்த்தபடுவது எதுவோ அது

குறியியல் Semiotics குறியீடுகளைப்பற்றி ஆராயும் அறிவியல் துறை. பண்பாடு என்பது பலவகையான சமூகக் குறியீடுகளினால் ஆனது என்பதனால் இது முக்கியமான பண்பாட்டு அறிவியலாகும் .மொழியியலுக்கு நெருக்கமான உறவுள்ளது

குறியீடு Symbol ஒன்றை குறிப்பிடும்பொருட்டு பயம்படுத்தப்படும் அடையாளம். இலக்கியத்தில் குறியீடுகள் முக்கியமான தொடர்புமுறைகள்

குறியீட்டியம் Symbolism குறியீடுகள் பயன்படுத்தும் அழகியல் முறை.

கூற்று Locution சொற்றொடர்மூலம் வெளிப்படும் மொழியின் அடிப்படை அர்த்த அலகு

கூட்டு நனவிலி Collective unconscious ஒரு மக்கள் கூட்டம் பொதுவாகக் கொண்டுள்ள நனவிலி. அச்சமூகத்தின் ஆழ்படிமங்கல் அங்கு உறைகின்றன. இக்கருத்து சி.ஜி.யுங்கால் முன்வைக்கப்பட்டது. கோட்பாடு Theory தகவல்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் பொது ஊகம் அல்லது கருத்து

கோட்பாட்டொறுத்தல் : Theoretical break கோட்பாடு சார்ந்த அணுகுமுறையில் இருந்து துண்டித்துக்கொள்ளுதல் .பின் நவீனத்துவப் பண்புகளில் ஒன்று

சமபொருட்சொல் Synonym ஒரே பொருள் தரும் இன்னொரு சொல்

சமூகவியல் Sociology சமூகத்தின் இயங்குமுறைகளைப்பற்றிய அறிவுத்துறை.

சொல்மையவாதம் Logo centrism சொல்லை சிந்தனையின் அடிப்படை அலகாகக் கொள்ளும் ஒரு சிந்தனை முறை.

சொல்பிறப்பியல் Etymology சொற்களின் வேர்களையும் உருவாக்க முறைகலையும் ஆராயும் மொழியியல் பிரிவு

சொற்களன் Discourse கருத்துப் பரிமாற்றம் நிகழும் மொழிச்சூழல் அல்லது பண்பாட்டுச்சூழல் . சொல்லாடல்களன் என்றும் இச்சொல் புழங்கப்படுவதுண்டு

செய்யுளாக்கம் Versificationமொரு கூற்றை யாப்பின் விதிகலுக்கு உட்பட்டு அமைத்தல்

சொல்லாடல் Discourse மொழியில் அர்த்தத்தை கொடுப்பதும் கொள்வதுமாக நிகழும் பரிமாற்றம். அல்லது உரையாடல்

சுதந்திர கவிதை Free verse யாப்பற்ற கவிதை

சொல்லி Narrator கதையைச் சொல்பவன். கதைக்குள் இவன் வரலாம் வராமலும் இருக்கலாம்

சுத்திகரணம் Catharsis படைப்பின் துயரத்தை தானும் அனுபவிக்கும் வாசகன் அடையும் மன மேம்பாடு. இதை அரிஸ்டாடில் முன்வைத்தார்

தகர்ப்பமைப்பு Deconstruction படைப்பை வாசகன் குறிகளாக உடைத்து தனக்குரிய படைப்பை உருவாக்கி பொருள்கொள்ளும் முறை. ழாக் தெரிதா முன்வைத்த ஆய்வுமுறை

தன்னுணர்வு Self-conscious தான் என்ற உணர்வு. உளவியலில் முக்கியமான கருத்தாக்கம் இது. தன்னிலை, தன்முனைப்பு இரண்டிலிருந்தும் வேறுபட்டது

தன்னிலை Subject மொழியில் உருவாகும் தான் என்னும் நிலைபாடு. இது உளநிலைபாடும் கூட என்று ழாக் லக்கான் முதலியோர் வகுப்பார்கள்.

தர்க்கம் Logic ஒரு கருத்திலிருந்து இன்னொன்றை உருவாக்கும் செயல். தாவல்களை பொதுவான அடிப்படையில் ஒருங்கிணைக்கும் முறை

தரிசனம் Vision ஒட்டுமொத்த நோக்கு. சாராம்ச நோக்கு

தன்னிலையுரை Apology தன் தரப்பை விளக்கிச் சொல்லும் உரை

தன்வரலாறு Auto biography தன் வாழ்க்கையை தானே சொல்லும் நூல்

தனிமையுரை Soliloquy தனித்திருக்கும் கதாபாத்திரம் தானெ உரையாடிக்கொள்வது

தன்முனைப்பு Ego தன் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் காணும் நிலை. தன்னை மையமாக்கி அறியும் நிலை. ·ப்ராய்டிய உளவியலில் இது முக்கியமனா கருத்தாக்கம். தன்னுணர்வு

தனிமனிதவாதம் Individualism தனிமனிதனை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் அணுகும் உருவாக்கும் முறை. தனிமனித சிந்தனையையே மறுத்த மதமேலாதிக்க காலகட்டத்தில் அதிலிருந்து மீறி எழுந்த எதிர்ப்பாக இது உருவாயிற்று.

தேய்வழக்கு Cliche பழக்கத்தால் பொருளிழந்துபோன சொல்லாட்சி

தேய்நடை Triteness பழக்கத்தால் பொருளிழந்துபோன நடை

திண்மம் concrete புறவயமான திட்டவட்டமான ஒன்று .

தொடர்புறுத்தல் communication பொருளை முன்வைப்பவன் பெறுபவனிடம் கொள்ளும் தொடர்பு

துண்டுப்பிரசுரம் Pamphlet தனியாக அச்சிட்டு வினியோகிக்கப்படும் சிறிய கட்டுரை

துன்பியல் Tragedy துன்பத்தில் முழுமைகொள்ளும் கலை நோக்கு. துன்பத்தில் முடியும் இலக்கியப்படைப்பு.

தொன்மம் Myth தொன்றுதொட்டு வழங்கிவரும் கதை அல்லது நம்பிக்கை.

நடப்பியல் Realism புலன்வழி அறிவனவற்றை மட்டுமே ஏற்கும் கதை சொல்லும் முறை .யதார்த்தவாதம்.

நடையியல் Stylistics மொழியை அமைக்கும் விதம் குறித்து ஆராயும் அறிவுத்துறை

நக்கல் Sarcasm கீழிறக்கும் தன்மைகொண்ட கிண்டல்

நடைமுறைவாதம் Pragmatism ஒன்றின் விளையும் பயன்பாடுமே அதை மதிப்பிட ஏற்ர சிறந்த வழிகல் என்று சொல்லும் சிந்தனை முறை

நனவோடை எழுத்து stream of consciousness மனம் ஓடும் விதத்தை அப்படியே பதிவுசெய்ய முயலும் எழுத்து. உதிரி சிந்தனைகள் கனவுகள் நினைவுகள் உளறல்கள் ஆகியவற்றால் ஆனது. சிலர் நினைவோடை என தவறாக மொழிபெயர்க்கிறார்கள். நினைவுகல் மட்டும் ஓடும் எழுத்தல்ல இது

நனவிலி Unconscious மனித மனத்தின் அடுக்குகலுக்கு கீழே உள்ள அறியப்படாத மனம். ஒரு ·ப்ராய்டிய கருத்தாக்கம்.

நவீனத்தன்மை Modernity நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுள்ள தன்மை

நவீனத்துவம் Modernism நவீன மயமாதலின் முழுமைக்ட்டத்தில் உருவான ஒரு கலை மற்றும் சிந்தனைப்போக்கு. நவீனமயமாதலின் எதிர்ம்றை இயல்புகளை அதிககமாகக் கவனிப்பது இது

நவீனமயமாதல் Modernization நவீனத் தொழில் நுட்பத்தின் மூலம் மாறுதலுக்குள்லாதல். கல்வி, போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவற்றில் வளர்ச்சிசுற்பத்தியும் வினியோகமும் பேரளவில் ஆதல்

நாட்டாரியல் Folklore நாட்டுப்புற கலையிலக்கியம் குறித்த ஆய்வு

நுண்மம் abstract பருவடிவமாக தெரியாத அல்லது உருவம் இல்லாத ஒன்று . அருவம் என்ற சொல்லாட்சியும் உண்டு

நுண்னுணர்வு sensibility கலைகளை கற்பனைமூலம் உள்வாங்கிக் கொள்ளும் திறன்

நூலடைவு Bibliography ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள நூல்களின் பட்டியல்

நிகழ்வியல் Phenomenology அனுபவங்கள் எப்படி நம்மில் நிகழ்கின்றனவோ அதனடிப்படையில் மட்டுமே அவற்றின் ஒழுங்குகளையும் தொடர்புகலையும் அறிய முடியும் என்று வாதிடும் கோட்பாடு. அதிகமும் பிரபஞ்ச நிகழ்வுகளைப்பற்றிய தத்துவ நோக்கு இது

நிரூபணவாதம் Empiricism புலன்களுக்கு முன் நிரூபிக்கக் கூடியதே உண்மை என்று கூறும் அணுகுமுறை. புலனறிவாதம் அனுபவ வாதம் என்ற சொற்களும் உண்டு

நினைவுப்பதிவு Memoir ஒருவரின் நினைவுகலின் பதிவாக வரும் எழுத்துமுறை

நுண் இறைவாதம் Mysticism இறையனுபவத்தை அல்லது பிரபஞ்ச அனுபவத்தை ஒருவர் தன் தனிப்பட்ட நுண்ணுணர்வால் அறிந்து முன்வைக்கும் நோக்கு

நீதிக்கதை Fable ஒரு கருத்தை வலியுறுத்தும் மையம் கொண்ட சிறிய கதை

நேர்கருத்து Thesis ஒரு சூழலில் முன்வைக்கப்படும் கருத்து. முரண்கருத்து அதை எதிர்கொள்கையில் முரணியக்கம் உருவாகிறது

பகுப்பாய்வு Analysis ஒன்றை பல உட்கூறுகளாகப் பிரித்து அவற்றை ஆராய்ந்து அதன் இயல்புகலை வகுக்கும் முறை

படிமம் Image ஒரு அகவய உணர்ச்சி அல்லது புரிதலின் பிரதிநிதியாக படைப்பில் வெளிப்படும் ஒரு காட்சி அல்லது பொருள் அல்லது நிகழ்வு. அது எதைக்குறிக்கிறது என்பது படைப்பில் சொல்லப்படுவதில்லை. அப்படிமமே அது உருவாக்கும் மன எழுச்சி மூலம் வாசகன் மனத்தில் அந்த உணர்ச்சியை அல்லது புரிதலை வாச்கன் மனத்தில் உருவாக்கும்

படிமை Icon ஒரு பொருள் அல்லது மனிதர் ஒரு குறிப்பிட்ட கருத்தின் வடிவமாகவே ஆதல். பாரதி தமிழ் மறுமலர்ச்சியின் படிமை.

பத்தி coloumn ஒரு எழுத்தாளர் இதழ் ஒன்றில் தொடர்ந்து எழுதும் கட்டுரைப்பகுதி

பரவசம் Bliss உச்சகட்ட இன்பம். கற்பனாவாதக் கலைகலைப்பற்றிய பேச்சுகளில் இச்சொல் பயன்படுத்தப்படும்

பரிமாணம் Dimension ஒன்றின் ஒரு தோற்றம். உண்மைக்கு பல பரிமாணங்கள் உண்டு

பரிணாமம் Evolution படிப்படியான வளர்ச்சி. சாதகமான கூறுகலை பெருஇக்கி பிறவற்றை விலக்கி நடைபெறும் வளர்ச்சியை மட்டுமே இச்சொல்லால் குறிக்கவேண்டும்

பலகுரல்தன்மை Polyphonic பலகுரல்களில் பேசும் தன்மை. ஒன்றுக்குமேற்பட்ட தரப்புகளை முன்வைத்தல். பலவகையான கூற்றுகள் முயங்கி வருதல். இலக்கியப் படைப்புகளின் இயல்பு இது என்பது நவீன விமரிசனத்தின் கருத்து

பல் பிரதித்தன்மை Intertextuality ஒரு நூலுக்குள் பல நூல்கள் தொடர்புகொண்டிருத்தல். பல நூல்களை தொட்டுச்செல்லும் நூலியல்பு. ஊடுபிரதித்தன்மை என்ற சொல்லே மேலும் பொருத்தம்

பிரதி Text அர்த்தத்தை உருவாக்கும்பொருட்டு சொற்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் அமைப்பு. நூல் என்பதன் மொழியியல் பெயர். பனுவல் என்றும் தமிழாக்கம் உண்டு

பனுவல் Text அர்த்தத்தை உருவாக்கும்பொருட்டு சொற்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் அமைப்பு. நூல் என்பதன் மொழியியல் பெயர்.

படிமவியல் Imagism படிமங்களை கலையின் அடிப்படைக் கூறாக முன்வைத்த அழகியல் முறை

பகடி Parody போலிசெய்து ஏளனம் செய்யும் முறை

பகுத்தறிவுவாதம் Rationalism ஒவ்வொந்றிலும் புறவயமான தர்க்க ஒழுங்கை எதிர்பார்க்ரும் நோக்கு

பயிலரங்கு Workshop க்லை இலக்கியங்களை கூட்டாக சேர்ந்து பயிலும் முறை

பரிவுணர்வு Sympathy ரசிகன் அல்லது வாசகன் படைப்பின் கதாபாத்திரம் மற்றும் சூழல் மீது கொள்ளும் இரக்க உணர்ச்சி

பழக்கவாதம் Behaviorism மன இயக்கத்தை பழக்கங்கலை வைத்து அறியும் அறிவுத்துறை

பா Lyric இசையும் நெகிழ்வும் கலந்த கவிதை

பாவியல்பு Lyricism இசையும் நெகிழ்வும் கலந்த தன்மை

பாலுணர்வு படைப்பு Erotica பாலுணர்வை தூண்டும் படைப்பு

பாலுறவு எழுத்து Pornography பாலுணர்வை தூண்டும் வணிக எழுத்து

பிரிப்பாளன் Decoder குறிகளின் அமைப்பான படைப்பை பிரித்து பொருள்கொள்பவன். அமைப்பியல் சார்ந்த சொல்

பிரச்சார இலக்கியம் Propaganda writing ஒரு குறிப்பிட்ட கருத்தை பிரச்சாரம்செய்யும் பொருட்டு உருவாக்கப்படும் ஆக்கம்

பிரமைக்காட்சி Hallucination மனப்பிரமையால் உருவாகும் மாயக்காட்சி. மீயதார்த்தவாதத்தில் இது முக்கியமானது..

பிழைத்தோற்றம் Fallacy இல்லாத ஒரு சிறப்பை ஒன்றின்மீது ஏற்றிகூறும் இலக்கியப் பிழை. இது இலக்கியத் திறனாய்வில் முக்கியமான கலைச்சொல்

புனைவுச்சம் Climax ஒரு புனைவு அதன் உச்சத்தை அடைதல்

புத்திலக்கியம் Avant-garde நவீன யுகம் உருவானபோது உருவான நவீன இலக்கியப் போக்கு. இலக்கியம் சான்றோருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உரியது என்பது இதன் அடிப்படை.

பொதுமைப்பாடு Generalization தகவல்களை தொகுத்து பொதுமைப்படுத்தி முடிவுக்கு வருதல்

பொருள்மயக்கம் Ambiguity இலக்கியத்தில் ஒரு சொல்லோ படிமமோ வரியோ பொருள்மயக்கம் அளித்தல். இது இலக்கியத்தில் சாதகமான ஒன்றாகவே நோக்கப்படுகிறது. வில்லியம் எம்சன் என்பவர் ஏழுவகை பொருள்மயக்கங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்

பொருளியல் Economics பொருள் சார்ந்த அனைத்தையும் குறித்து ஆராயும் அறிவுத்துறை

பொருள்முதல்வாதம் [Materialism ] பருப்பொருள் புறவயமான இருப்பு கொண்டது என்றும் அதுவே அடிப்படை என்றும் வாதிடும் கருத்தியல் தரப்பு

புதுமலர்ச்சிக்காலம் Renaissance க்லை சிந்தனை இலக்கியம் ஆகியவற்றில் மலர்ச்சி ஏற்படும் காலகட்டம். பொதுவாக இச்சொல்லால் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியே குறிக்கப்படுகிறது

புராணிகம் Myth தொன்றுதொட்டு வழங்கிவரும் கதை அல்லது நம்பிக்கை. தொன்மம் என்ற சொல்லும் உண்டு. அது மதம் சார்ந்ததாக இருக்கையில் இச்சொல்லை பயன்படுத்துவது நல்லது

புறமொழி Parole பேசும்போது நாம் புறத்தே கேட்டு புரிந்துகொள்ளும் மொழி. அகமொழி என்ற இன்னொன்று உண்டு. அது ஒரு பண்பாட்டின் உள்ளுரையாக உள்ளது. அதுவே கேட்கும்மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது

பெருங்கதையாடல் Grand Narrative ஒட்டுமொத்த வரலாற்றுக்கும் பொருந்தும்படி ஒட்டுமொத்த சமூகத்தையும் தழுவியபடி உருவாக்கப்படும் புனைவுகள். பின் நவீனத்துவக் கோட்பாட்டின்படி தத்துவங்கள் கருத்தியல் எல்லாமே கதையாடல்கள்தான்.

பேச்சுமொழி Parole பேசும்போது நாம் புறத்தே கேட்டு புரிந்துகொள்ளும் மொழி. புறமொழி என்ற சொல் மேலும் பொருத்தம். அகமொழி என்ற இன்னொன்று உண்டு. அது ஒரு பண்பாட்டின் உள்ளுறையாக உள்ளது. அதுவே கேட்கும்மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது.

பிறன் Other தன்னை ஒரு இருப்பாக உணரும் ஒருவன் அறியும் மற்றவர். இது இருத்தலியலில் முக்கியமான கலைச்சொல். ‘பிறனே நரகம்’. என்பது சார்த்ர் முன்வைத்த புகழ்பெற்ற இருத்தலியல் கூற்று

பிளவாளுமை Split personality ஒரு மனிதன் மன அளவில் இரு மனிதர்கலாகப் பிளவுறும் உளச்சிக்கல். இது பல நாவல்களுக்கு கதைகக்ருவாகியுள்ளது

மனிதாபிமானம் Humanism மனிதன் மீதான அன்பிலிருந்து உருவாகும் உலகநோக்கு. மனிதநேயம் என்றும் பெயர் உண்டு

மதிப்பீடுகள் values சமூகம் முக்கியமாக கருதும் நடத்தைமுறைகள்

மிகுபுனைவு Fantasy யதார்த்தத்துக்கு கட்டுப்படாமல் கற்பனை மூலம் உருவாக்கப்பட்ட கனவுச்சாயல் கொண்ட புனைவுமுறை. மிகைப்புனைவு என்றும் சொல்வர்

முரண்நகை Irony முரண்பாட்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை. அதிகமும் விமரிசனத்தன்மை கொண்டது. பேரிலக்கியங்கள் வாழ்க்கையின் முரண்நகையை வெளிப்படுத்தும் என்பார்கள்

முரண்பாடு Paradox ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகக்ல் அல்லது உண்மைகள்

மனத்தளர்வு Depression மனச்சோர்வு மூல உருவாகும் செயலின்மை. இலக்கிய விவாதங்கலில் இது ஒரு படைப்பு மனநிலையாக கொள்ளப்படுகிறது.

முறைமை Methodology கருத்துக்களை உருவாக்கவும் பரிசீலிக்கவும் கடைப்பிடிக்கப்படும் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறை

முழுமறுப்புவாதம் Nihilism அனைத்து கோட்பாடுகளையும் மறுக்கும் தத்துவ நிலைபாடு

முரணியக்கம் Dialectics கருத்துக்கள் ஒன்றோடொன்று முரண்பட்டு மோதி ஒன்றை ஒன்று உள்வாங்கி புதிய முரண்பாடுகளை அடைந்து தொடர்ந்து முன்னேறும் இயக்கநிலை.

முரண்கருத்து Antithesis ஒரு நேர்கருத்தை முரண்பட்டு எதிர்க்கும் எதிர்கருத்து

முறை Method ஒழுங்குபடுத்தப்பட்ட வழிமுறை

முறையியல் Methodology காண்க முறைமை. இது தவறான சொல்லாட்சி

மூலக்கருத்து Motif ஒரு சிந்தனைக்கு அடிப்படையாக உள்ள முதல் கருத்து

மூலப்படிமம் Archetype பண்பாட்டின் ஆழத்தில் இருக்கும் அடிப்படையான படிம வடிவம். அது தொடர்ந்து பல படிமங்களை உருவாக்கும். தொல்படிமம், ஆழ்படிமம் போன்றவை பிற சொற்கள். சி.ஜி.யுங் உருவாக்கிய சொல்லாட்சி இது.

மெய்யியல் அடிப்படையான சிந்தனைகள் மட்டும் அடங்கிய

மேநிலைமொழி Meta language ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக உருவாக்கப்படும் தனி மொழி . மீமொழி தனிமொழி என்னும் சொல்லாட்சிகளும் உண்டு

மீமொழி Meta language ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக உருவாக்கப்படும் தனி மொழி .

மிகையுணர்ச்சி Sentiment உணர்ச்சிகளை வேண்டுமென்றே அதிகமாக்கி வாசகனை கலங்க வைக்கும் உத்தி. இலக்கியத்தில் இது எத்ர்மறையானதாகவே கருதப்படும்

மிகை நவிற்சி Hyperbole மிகையாக கூறும் இலக்கிய அணி

மீ இறையியல் Transcendentalism மனிதனின் உள்ளார்ந்த ஆன்மீக ஆற்றலை மையமாக்கி சிந்திக்கும் போக்கு. எமர்சன் இதன் முக்கியப் பிரச்சாரகர்

முகவுரை Prologue படைப்பின் முன் உள்ள தனிக் கூற்று

முதலாண்மை Capitalism சமூக மூலதனத்தை சிலர் உரிமை கொண்டுள்ள சமூக அமைப்பு

முதலாளர் Bourgeoisie சமூக மூலதனத்தை கைப்பற்றி உரிமை கொண்டுள்ளவர்கள்

முடிவுரை Epilogue படைப்பின் பின் உள்ள தனிக் கூற்று

மொழிபு Narration விவரித்து உணர்த்தும் முறை. கதை சொல்லல். எடுத்துரைத்தல். கதையாடல் என்ர தவறான மொழியாக்கம் உண்டு

மொழிபியல் Narratalogy விவரித்து உணர்த்தும் முறைகளைப்பற்றிய அறிவியல்

வட்டார வழக்கு Colloquialism ஒருகுறிப்பிட்ட நிலப்பகுதியின் பேச்சு மொழியை படைப்பில் பயன்படுத்தும்போக்கு

வரலாற்றியல் Historiography வரலாறு எழுதப்படும் முறைகளைப்பற்றிய அறிவுத்துறை

வரலாற்றறிக்கை Chronicle வரலாற்று நிகழ்வுகளின் பட்டியல்

வரைமை Decorum இலக்கியத்தில் கடைப்பிடிகப்படவேண்டிய பொருத்தப்பாடுகள்

வழக்குநடை Demotic இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் எளிய பேச்சு நடை]

வழக்கொழி சொல் Archaism மறைந்துபோன பழைய சொல்

வாய்மொழிமரபு Oral tradition எழுதப்படாமல் பேச்சு பாட்டு மூலமே நீடித்திருக்கும் இலக்கிய கலைமரபு.

வெற்று வழக்கு Jargon சாரமில்லாத சொல்லாட்சிகள்

விழுமியம் Axiom பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறி

விழுமியவியல் Axiology கருத்துக்களின் வாழ்க்கைமதிப்பை ஆராயும் அறிவுத்துறை

‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ [உயிர்மை வெளியீடு] என்ற நூலில் இருந்து