போகன் சங்கர் அமர்வு - கவிதைகள்
கவிதைகள்:
1.
வருத்தம்
- பசுவய்யா
வருத்தம்
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேடல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்
2.
கால
வழுவமைதி- ஞானக்கூத்தன்
காலவழுவமைதி
“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”
‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’
“வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”
‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…
******
3. கனவு- அன்று- கனவு- அபி
கனவு-அன்று-கனவு
எல்லாம் முடிந்துவிட்டது எனக்
கடைசியாக வெளியேறிய போது
கவனித்தான்
பின்புலமற்ற
தூய நிலவிரிவு ஒன்று
அவனுக்காகக் காத்திருப்பதை
கனவுபோன்று இருந்தாலும்
கனவு அன்று அது
ஒளியிலிருந்து
இருளை நோக்கிப்
பாதிவழி வந்திருந்தது
அந்த இடம்
கிழக்கும் மேற்கும்
ஒன்றாகவே இருந்தன
தூரமும் கூடத்
தணிந்தே தெரிந்தது
தெரிந்ததில்
எப்போதாவது ஒரு மனிதமுகம்
தெரிந்து மறைந்தது
ஒரு பறவையும் கூடத்
தொலைவிலிருந்து தொலைவுக்குப்
பறந்துகொண்டிருந்தது
சஞ்சரிக்கலாம்
மறந்து மறந்து மறந்து
மடிவுற்றிருக்கலாம் அதில்
நடக்க நடக்க
நடையற்றிருக்கலாம்
ஆயினும்
உறக்கமும் விழிப்பும்
துரத்திப் பிடிப்பதை
அவற்றின் மடிநிறைய
தலைகளும் கைகால்களும்
பிதுங்கிக் கொண்டிருப்பதைப்
பார்க்கும் நிமிஷம்
ஒருவேளை வரலாம்
கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்
4.
-உறுமல்-பாதசாரி
உறுமல்
ஒரு கொய்யாப்பழம்போல
இல்லை
ஒரு உருளைகிழங்குபோல
இல்லை
ஒரு புளியம்பழம்போல
இல்லை
காலத்தில் நான்
பழுத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு புலியின் முதுகில்
சீழ்க் கொப்புளம்போல…
5.
வெளியில்
ஒருவன் சுகுமாரன்
வெளியில் ஒருவன்
பரிவில்லாதது வீடு
வெளிக் காற்றில் ஏராளம் விஷம்
சோகை பிடித்த தாவரங்கள்
நீர்நிலைகளில் சாகும் பறவைகள் மிருகங்கள் .
பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில்
சரித்திரம் கெக்கலிக்கும்.
தேசக் கொடிகளின் மடிப்பவிழ்ந்து
எங்கும் பொய்கள் கவியும்.
ஒன்று அல்லது மற்றொன்று –
விலங்குகளை இழுத்து நகரும் மனிதர்கள்.
திசைகளில் அலைந்து திரும்பிய பறவை சொல்லிற்று
மனிதர்கள் எரிக்கப் படுவதை
பெண்கள் சிதைக்கப் படுவதை
குழந்தைகளும் சங்கீதக் கருவிகளும் பிய்த்தெறியப் படுவதை
பூக்களும் கவிதைகளும் மிதிக்கப் படுவதை
‘மூலதனத்தின்’ பக்கங்கள் ஈரமற்றுப் போனதை
கடவுளின் மகுடத்தைப் பேய்கள் பறித்துக் கொண்டதை
சகோதரர்களுக்குக் கோரைப் பற்கள் முளைத்ததை.
பாதுகாப்பற்றது வெளி
தற்கொலைக்கும் துப்பாக்கி முனைக்கும் நடுவில்
நமது வாழ்க்கை.
இரண்டு குரோத பற்சக்கரங்களுக்கு இடையில்
நமது காலம்.
நாம் எதிர்பார்த்திருக்கிறோம்
அணுகுண்டு வெடிப்பின் கடைசி நொடிக்காய்.
எனினும்
வயலின் ஸ்வரங்களாய்ப் பொழியும் மழை
தாமிரச் சூரியன்
பறவைகள் பச்சிலைக் காற்று குதூகல முகங்கள்
அக்குளில் சிறகு பொருத்தும் இசை – இவற்றுக்காய்க்
காத்திருக்கிறது நம்பிக்கை
பனிப்பாறைகளைப் பிளந்து மூச்சுவிடும் செடிபோல.
6. கல் எறிதல்- தேவதச்சன்
கல் எறிதல்
ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்
உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்
உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது
வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.
7. புலியின் தனிமை- தேவதேவன்
புலியின் தனிமை
[அ]
மனிதரற்ற வீதியில் நடந்து
வனத்துக்கு திரும்பியது
ஒருமனிதனையும் காணாத
பசி வேதனையால வாடிய புலி
மீண்டும் பெருத்த தினவுடன் ஒரு நாள்
ஒரு நகரத்துக்குள் நுழைந்துவிட
அலறியடித்துக் கொண்டு ஓடி
தம் ஓட்டுக்குள் சுருண்டுகொண்ட மனிதர்
துப்பாக்கி தூக்கி பாய்ந்து வந்த ராணுவம்
கூண்டுக்குள் பிடிக்கத்துடித்த சர்க்கஸ் மனிதர்
பத்திரமாய் பிடித்து காட்டுக்குள் அனுப்ப
தீர்மானம் கொண்ட ‘கருணையாளர்கள் ‘
யாவரையும் எண்ணி எண்ணி
தாளாத துக்கம் கனல
தகித்துக்கொண்டிருந்தது கானகத்தில்
[ஆ]
ஓ கடவுளே!
எத்தனை ஆபத்தானது இந்த அறியாமை!
அதி உக்கிரமான ஓர் அழகையும்
முடிவற்ற விண்ணாழத்தால்
பற்றவைக்கப்பட்ட பார்வையையும்
அதிராது சுமந்து செல்லும் பெரு நடையையும்
இங்கு அறிந்தவர் எவருமில்லையோ
தன்னை அறியாது
உறுமிக்கொண்டிருக்கும் இந்த வலிமை
மிருகச்சிறை
எவ்வளவு ஆபத்தானது!
[இ]
தன்னை அறிகையில் புலி
அறியாத வேளையில் விலங்கு.
8. வண்ணத்துப்பூச்சியும் கடலும்- பிரமிள்
வண்ணத்துப்பூச்சியும் கடலும்
சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி…
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.
*****
9. பொருள் வயின் பிரிவு- விக்கிரமாதித்தன்
பொருள்வயின் பிரிவு
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை.
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழைபெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள்
வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள.
****
10. சினேகிதிகளின் தாழ்வான வீடு- கலாப்ரியா
கறுப்பேறிப் போன
உத்திரம்,
வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு
கையெட்டும் உயரத்தில்.
காலேஜ் படிக்கும் அண்ணன்
அதில் அவ்வப்போது
திருக்குறள்,
பொன்மொழிகள்
சினிமாப் பாட்டின்
நல்லவரிகள் – என
எழுதியெழுதி அழிப்பான்
எழுதுவான்.
படிப்பை நிறுத்திவிட்டு
பழையபேட்டை மில்லில்
வேலை பார்க்கும் அண்ணன்
பாஸிங்ஷோ சிகரெட்டும்
தலைகொடுத்தான் தம்பி
விளம்பரம் ஒட்டிய
வெட்டும்புலி தீப்பெட்டியும்
உத்திரத்தின்
கடைசி இடைவெளியில்
(ஒளித்து) வைத்திருப்பான்.
அப்பா வெறுமனே
பத்திரப்படுத்தி வந்த
தாத்தாவின் – பல
தல புராணங்கள்
சிவஞானபோதம்
கைவல்ய நவநீதம்
சைவக்குரவர் சரித்திரங்கள்
பலவற்றை,
வெள்ளையடிக்கச் சொன்ன
எரிச்சலில், பெரிய அண்ணன்
வீசி எறியப் போனான்.
கெஞ்சி வாங்கி
விளக்கு மாடத்தில் அடைத்ததுபோக
உத்திர இடைவெளிகளில்
ஒன்றில் தவிர
அனைத்திலும்
அடைத்து வைத்திருப்பாள்
அவன் அம்மா.
முதல்ப்பிள்ளையை
பெற்றெடுத்துப் போனபின்
வரவே வராத அக்கா
வந்தால்-
தொட்டில் கட்ட
தோதுவாய் – அதை
விட்டு வைத்திருப்பதாயும்
கூறுவாள். . . . . . . . . . . . .
நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று சம்மணமிட்டு
காலைக் கயிற்றால் பிணைத்து –
இதில் தூக்கு மாட்டித்தான்
செத்துப்போனார்
சினேகிதனின்
அப்பா.