ராஜகோபாலன் அமர்வு

1.   அற்புதத் திருவந்தாதி :

பாடல் 8-  

ஆயினேன் ஆள்வானுக்(கு) அன்றே பெறற்கரியன்

ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய

புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்

அனற்கங்கை ஏற்றான் அருள்.

‘ஆள்வானுக்கு (ஆள்) ஆயினேன்; அன்றே பெறற்கரியன் ஆயினேன்; அஃதன்றே அவன் அருள் ஆமாறு’ என இயைத்து முடிக்க. ஆள்வான் - உண்மையா ஆள்வான்; சிவன் “ஆள்வான்” என்றதனால், “ஆயினேன்” என்றது, ‘ஆள் ஆயினேன்’ என்றதாயிற்று. ‘பெறற்கு அரியன்” என்றது, ‘சிவன்’ என்றபடி. ‘சிவனுக்கு ஆளாயினேன்; அன்றே யானும் சிவனாயினேன்; தன் அடியவரைத் தானாகச் செய்தலேயன்றோ சிவனது திருவருளின் சிறப்பு’ என்றபடி. “திகழ்ந்த மெய்ப்பரம் பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்”1 என்றது காண்க. “தூய ... போல்வான்” என்றது ‘சிவன்’ என்றபடி. ‘புனலாகிய கங்கை’ என்க. “அனற்கு அங்கை” என்பதை, ‘அங்கைக்கு அனல்’ எனப் பின்முன்னாக நிறுத்தி, உருபு பிரித்துக் கூட்டி, நான்காம் உருபை ஏழாம் உருபாகத் திரித்துக் கொள்க.

பாடல் 11-

ஒன்றே நினைந்திருந்தேன்; ஒன்றே துணிந்தொழிந்தேன்;

ஒன்றையென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்

கங்கையான், திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற்(கு) ஆளாம் அது.

நினைதல் - ஆராய்தல். துணிதல் - நிச்சயித்தல். ‘ஓழி’, துணிவுப் பொருண்மை விகுதி. உள்ள டைத்தல் - எப்போதும் மறவாது நினைதல். இறுதியில் ‘அவ்வொன்றே’ எனச் சுட்டு வருவிக்க. ஏகாரம், எடுத் தோத்துப் பொருட்டாய், எழுவாய்த் தன்மை உணர்த்தி நின்றது. காண், முன்னிலை யசை. ‘அவ்வொன்றே ஆளாம் அது’ என முடிக்க. ஒளி - தீ; ஆகுபெயர்.

பாடல் 14-

தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,

தானே பெருஞ்சேமஞ் செய்யுமால்; - தானேயோர்

பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்

நீணாகத் தானைநினைந்து

 

‘நீள் நாகத்தானை நினைந்தமையால், தனி நெஞ்சம், தானே தன்னைக் கடைத்தேற்றிக் கொள்ளுதற் பொருட்டுத் தானே தனக்குப் பெருஞ்சேமத்தைச் செய்து கொள்கின்றது’ என்க. ‘அவனை நினைப்பது ஒன்றே உயிர்க்குப் பாதுகாப்பாவது? என்பதும், ‘எம் நெஞ்சம் அதனைத் தானே தெரிந்து கொண்டு நினைக்கின்றது’ என்பதும் கூறியவாறு.

 

தனி நெஞ்சம் - துணையற்ற நெஞ்சம். சேமம் - பாதுகாவல். ஆல், அசை. ‘அகம் பூணாற் பொலியாநிற்க’ என்க. ஆகம் - மார்பு. பூண் - அணிகலம். ‘பொலியாநிற்க நீள் நாகத்தை உடையான்’ என்றது, ‘நீள் நாகமே பூணாக அகம் பொலிய’ என்றபடி.

 

 

பாடல் 17-

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே; கைதொழுது

காண்பார்க்குங் காணலாங்; காதலாற் - காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே; தொல்லுலகுக்

காதியாய் நின்ற அரன்.

“தொல் உலகுக்கு ஆதியாய் நின்ற அரன்” என்பதை முதலிற் கொள்க. ஆதி - முதல்; முதல்வன். முதலில் உள்ள “காண்பார்” என்பது, ‘உலகிற்கு முதல்வன் எவனும் இல்லை’ என முரணிக் கூறுவாரை. அவர்க்குக் காணலாம் தன்மையாவது, அவரவர் ‘மெய்’ எனக் கொண்ட பொருள்களாய் நின்று அவர்க்குப் பயன் தரும் தன்மை. ‘அவனின்றியாதும் இல்லை’ என்பது கருத்து. பின்னர், “தொழுது காண்பார்” என்றதனால், முன்னர் “காண்பார்” என்றது, தொழாதே காண்பாரையாயிற்று. கை தொழுது காண்பார், தெய்வம் உண்டு’ எனப் பொதுப்பட உணர்ந்து யாதேனும் ஓர் உருவத்தில் கண்டு வழிபடுவார். அவர்க்குக் காண்டல் கூடுவதாவது, அவரவர் வணங்கும் உருவத்தில் நின்று, அவர்க்குப் பயன்தருதல். காதலால் காண்பார், ‘உலகிற்கு முதல்வன் உளன்; அம்முதல்வனாம் தன்மையை உடையவன் ‘சிவனே’ என உணர்ந்து, அதனானே அவன்பால் அன்பு மீதூரப் பெற்றுக் காண விரும்புவோர். ‘அவர்கட்குப் புறத்தும் அகத்தும் ஒளியாய் வெளிப்பட்டு நின்று அருளுவான்’ என்க. “சிந்தையுளே” என்றே போயினாராயினும், “சோதியாய்” என்றதனால் ‘புறத்தும்’ என்பதும் பெறப்பட்டது. “சுடர் விட்டுளன் எங்கள் சோதி”1 என்றதற்கு, “ஆன்ற அங்கிப் புறத்தொளியாய், அன்பில் - ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்” எனப் பொருள் கூறியனமை காண்க. தோன்றும் - தோன்றுவான். ஏகாரம் தேற்றம். அரன் - பாசத்தை அரிப்பவன்.

பாடல் 20-

அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே

அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற

மெய்ப்பொருளுந் தானே; விரிசுடர், பார், ஆகாயம்

அப்பொருளுந் தானே; அவன்.

`அவன்` என்பதை முதலில் வைத்து, `அவனது இயல்பைக் கூறுமிடத்து` எனப் பொருள் விரிக்க. அறிவான்- உயிர்கட்குச் செய்வது காட்டும் உபகாரம் மட்டும் அன்று; காணும் உபகாரமுங்கூட` என்பதை விளக்கச் சிவஞான போதத்துப் பதினொன்றாம் சூத்திரச் சிற்றுரையில் இவ்வடிகள் எடுத்துக்காட்டப் பட்டமை காண்க. அறிகின்ற - அறியப்படுகின்ற. விரி சுடர், கதிரும், மதியும், தீயும். `அப்பொருள்` என்றது, `மெய்ப்பொருள் அல்லாது வேறு பொருள்` என்றதாம். `அவன்` என்றது, பண்டறி சுட்டாய்ச் சிவனைக் குறித்தது.

பாடல் 22-

வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்

சிந்தை யதுதெரிந்து காண்மினோ! - வந்தோர்

இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்

பிரானீர்உம் சென்னிப் பிறை.

`வந்தோர்` என்பது முதலாகத் தொடங்கி, `பிறைக்கண்` என ஏழாவது விரித்து உரைக்க. `வந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. நீர் - நீர்மை; தன்மை. கொள்வது உட் கொள்வது; விழுங்குவது. `ஒக்கும் சிந்தை` என இயையும். சிந்தை - எண்ணம். அது. பகுதிப் பொருள் விகுதி. காண்மின் - குறிக்கொண்டு நோக்குமின். ஓகாரம், சிறப்பு. `அடைக்கலமாக வந்து அடைந்த திங்களை நினையாது விட்டு விடாதீர்` என்றபடி.
சார்ந்தாரைக் காக்கும் சிவனது இயல்பை அறியாதார் போன்று அறிவித்தவாறு.

 

பாடல் 26 –

ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன

போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்

மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே

அக்கயலே வைத்த அரவு.

`கறை மிடற்றான்` என்பதை முதலிற் கொள்க. ஞான்ற - நான்ற; தொங்கிய. குழல் - குழல்போலப் புரிசெய்த. வரை - கீற்று; என்றது கம்பியை. போல், அசை. போன்ற - போன்றன. `பொன் மார்பு` என்பதில் பொன் - அழகு. அக்கு - எலும்பு மாலை, `அதன் அயலிலே வைத்த அரவு (பாம்பு) அயல் (புறத்தில்) ஏனை எல்லா வற்றிலும் மிக்குத் தோன்றும் முறையில் எங்கும் ஞான்று விளங்கி மிளிரும்` என்க. விளங்கி மிளிர்தல், ஒரு பொருட் பன்மொழி. இது பெருமானது திருவுருவத்தைப் புகழ்ந்தவாறு.

பாடல் 27-

அரவமொன்(று) ஆகத்து நீநயந்து பூணேல்;

பரவித் தொழுதிரந்தோம் பன்னாள்;- முரணழிய

ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே

பொன்னாரம் மற்றொன்று பூண்.

ஆகம் - உடம்பு. `ஒன்றும்` என முற்றும்மை விரித்து, `எதனைப் பூண்டாலும் பாம்பு ஒன்றை மட்டும் பூணாதே` என்க. `பாம்பொடு பழகேல்` * என்பார் பெரியோர் ஆதலின், அஃது என்றாயினும் தீமையாகவே முடியும் என்று இரக்கின்றோம் என்பதாம், `ஒன்று` என்பது இனங்குறித்து நின்றது. நயந்து - விரும்பி. என்றதனால், `சிவன் பாம்பை விரும்புகின்றான்` என்பது பெறப்படும். பரவுதல் - துதித்தல். முரண் - வலிமை. ஒன்னாதார் - பகைவர். `மற்றொன்று` என்பதும் மற்றோர் இனத்தையே குறித்தது. `பொன்னாரம்` என்பது, ஒருபொருள் குறித்த வேறு பெயராய் வந்தது. இஃது அன்பே காரணமாக, இறைவனது ஆற்றலை மறந்து, அவனுக்கு வரும் தீங்கிற்கு அஞ்சிக் கூறிய கூற்றாய் அமைந்தது. எனினும், `மூவெயிலும் ஓர் அம்பால் எய்தான்` என அவனது அளவிலாற்றல் குறிக்கப்பட்டது.

பாடல் -28 

பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்

நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்

பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்

கென்முடிவ தாக, இவர்.

`இவர்` என்றது இறைவரை அண்மையில் வைத்துச் சுட்டியது. இதன் பின், `கோள் நாகம்` என்பதைக் கூட்டி, இரண்டையும் முதலில் வைத்து, `ஒன்று பூண் ஆகப் புனைந்து, ஒன்று அதளின்மேல் மிளிர நாண் ஆக நன்கு அமைத்து, (ஒன்று) முடிமேல் சூடுவதும் ஆகிய இவையெல்லாம் பொறியிலியேற்கு என முடிவதாக` என இயைத்துப் பொருள் கொள்க. கோள் - கொடுமை. பூண் - அணிகலம். பொங்கு - அழகு மிகுந்த. அதள் - புலித்தோல்; இஃது உடுக்கையாக உடுத்தப்பட்டது. நாண், அரைநாண். `பொறியிலியேற்கு` எனத் தம்மையே குறித்தாராயினும், `தம் போலியர்க்கு` என்றலே கருத்து என்க. பொன் முடி - பொன் போலும் முடி; சடைமுடி. பொறி - அறிவு. என் - என்ன பொருள். முடிவதாக - முடிதற் பொருட்டு. `ஓன்று` என்பதை, பொன்முடிக்கும் கூட்டுக. அஃதாவது, `விளங்குதற் பொருட்டு` என்றதாம். `யான் அன்புடை யேன்; ஆயினும் அறிவிலேன்; ஆகவே, இவர் செய்வன எல்லாம் என் போலியர்க்கு என்ன விளங்குதற்பொருட்டு` என்றவாறு. எனவே, `ஆன்றமைந் தடங்கிய அறிவர்க்கே இவர் செய்வன விளங்கும்.
இவ்வாறு அம்மையார் கூறுவன எல்லாம் நம்மனோரை முன்னிட்டுக் கொண்டேயாம்.

பாடல் 35 

அடுங்கண்டாய் வெண்மதியென்(று) அஞ்சி இருள்போந்

திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்

அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல

மணிமிடற்றின் உள்ள மறு.

`மறு, இருள், மதி அடும்` என்று அஞ்சிப் போந்து இடம் கொண்டு இருக்கின்றதை ஒக்கும்` என இயைத்துக் கொள்க. `கண்டாய்` முன்னிலை யசை. அடும் - கொல்லும். `படங் கொள் அரவு, அணி மிடற்ற அரவு, பேழ்வாய் அரவு` எனத் தனித்தனி இயைக்க. பாம்பு படம் எடுத்து ஆடும் பொழுது அதன் கழுத்து அழகாய் இருத்தல் பற்றி. `அணிமிடற்ற அரவு` எனப்பட்டது. பேழ்வாய் - பெரிய வாய்; எலிகளை விழுங்கும் வாய். அசைத்தான் - இறுகக் கட்டினவன். கோலம் - அழகு. மணி மிடறு - நீல மணிபோலும் கழுத்து. மறு - கறை. இருளுக்கு வந்து இடம் கொள்ளுதல் இன்மையால் இல்பொருள் உவமையும், வந்தமைக்கு ஒரு காரணம் கற்பித்தமையால் தற்குறிப்பேற்றமும் கூடி வந்தமையின் இது தற்குறிப்பேற்ற உவமையணி. இதனால் இறைவனது கண்டத்தைப் புகழ்ந்தவாறு.

பாடல்- 38

ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந்

தீண்டச் சிறுகியதே போலாதே? – பூண்டதோர்

தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு

கூரேறு காரேனக் கொம்பு.

`பூண்டது ஓர்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `கொம்பு, போலாதே` என முடியும். ஏகாரம், எதிர்மறை வினாப் பொருட்டாய் உடன்பாட்டுப் பொருளைத் தந்தது. தார் - மார்பில் அணியும் மாலை, `தாராக ஏறிய பாம்பு` என்க. கூர் ஏறு - கூர்மை பொருந்திய. ஏனம் - பன்றி, திருமால் கொண்ட வராகாவதா ரத்தின் இறுதியில் அதனை அழித்து, அதன் கொம்பைச் சிவபிரான் மாலையில் கோத்தணிந்தமை புராணங்களில் கூறப்படுவது. `முற்றல் ஆமை, இளநாகமோடு, ஏன முளைக் கொம்பு அவை பூண்டு`* என்றமையும் காண்க. இறைவன் மார்பு வானத்திற்கும், அதில் அணியப்பட்ட பாம்பு இராகுவிற்கும், ஏனக் கொம்பு திங்களுக்கும் உவமையாகக் கூறப்பட்டன. திங்கள் சிறுகியதற்குக் காரணம் கற்பித்தது தற்குறிப்பேற்றம். எனவே, இது தற்குறிப்பேற்ற உவமையணியாதல் அறிக. இங்ஙனம் இறைவனது. மார்பணியைப் புகழ்ந்தவாறு.

 பாடல் -57

நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய

தீய அரவொழியச் செல்கண்டாய்; - தூய

மடவரலார் வந்து பலியிடார், அஞ்சி,

விடவரவம் மேல்ஆட மிக்கு.

`எல்லாம்` என்பதன் பின், `சென்று` என்பதும், `கண்டாய்` என்பதன்பின், `ஏன்எனில்` என்பதும் வருவிக்க. கண்டாய், முன்னிலையசை. விடம் - நஞ்சு. `விட அரவம் மிக்கு மேல் ஆடுதலால், மடவார் அஞ்சி, வந்து பலி இடார்` என்க. `எம் அன்பினால் உன்னை, அறியாதார் போல நினைத்துச் சொல்கின்றேம்` என்பதாம்.

 

 

பாடல் 61

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்

இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்

எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது?

அன்று - ஆட்படாது உலகியலில் இருந்த அன்று. இன்று - உலகியலின் நீங்கி ஆட்பட்ட பின்னதாகிய இன்று. இரு நிலைகளிலும் உன் உருவத்தை நான் காணவில்லையென்றால் எப் பொழுதுதான் நான் அதனைக் காண்பது? நீ சிவனுக்கு ஆள் என்கின் றாயே; அவன் உருவம் எத்தகையது என வினவுவார்க்கு நான் என்ன விடை சொல்லுவேன்` என்றபடி. `எவ்வுருவோ நும்பிரான்` என்பதில், உரு உடையவனை, `உரு` என்றது உபசார வழக்கு. `எவ் வுருவோ` என்னும் ஓகாரத்தை, `ஏது` என்பதனோடும் கூட்டுக. ஏது- எத்தகையது. ஆட்படாதபொழுது எந்த உருவத்தையும் காணவில்லை. ஆட்பட்ட பின் உருவத்தை ஒன்றாகக் காணவில்லை; கயிலையில் கண்டது ஓர் உருவம்; ஆலங்காட்டிற் கண்டது ஓர் உருவம்; அவரவர் கள் சொல்லக் கேட்பன பல உருவங்கள்; அவை கருதுவார் கருதும் உருவங்கள்; ஒருபால் உலகளந்த மாலும், ஒருபால் உமையவளும் ஆகும் உருவம்; அரியும், அயனும் ஆய உருவம் முதலியன. 2 `உருவ சிவன் தடத்த சிவனேயன்றிச் சொரூப சிவன் அல்லன்` என்பதும் `தடத்த சிவனே கண்ணுக்குப் புலனாவன்; சொரூப சிவன் உணர்வுக்கு மட்டுமே புலனாவன்` என்பதும் இதன் கருத்துக்களாகும்.
அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
உருவும் உடையான் உளன்.
என்றது காண்க. `என்றுந்தான் எவ்வுரு` என்றது, நிலையான உரு எது` என்று வினாவி அஃது இல்லை, என்றபடி.

அற்புதத்திருவந்தாதிக்கான உரை thevaaram.org என்ற இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -70

 

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி

உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்

விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே

கண்டு வணங்கும் களிறு 

—– பேயாழ்வார் 

 

கம்பராமாயணம்:

 

1.   கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத;
 உரு அறியாப்
பிள்ளை அழுத;
 பெரியோரை என் சொல்ல?
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால். (16)

(அயோத்தியா காண்டம்: இராமன் காடு செல்வது கேட்ட மாந்தர் நிலை)

 

 

(கிள்ளை – கிளி; பூவை – நாகணவாய்; பூசை – பூனை; மாற்றத்தால் – சொல்லால்)

உரை: ஜடாயு : இராமன் வனவாசம் செல்வான் என்று சொல்லிய சொல்லால், கிளியும், நாகணவாய்ப் பறவையும் (மைனா) அழுதன. மாளிகையின் மாடங்களுக்கு உள்ளே இருந்த வீட்டுப் பூனைகள் அழுதன. வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத சிறு குழந்தைகள் கூட அழுதன. பெரியோர்கள் அழுததைப் பற்றி என்னவென்று சொல்வது?

.2.  தாய்தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை அறியாத

  ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய

  நீ அறிதி எப்பொருளும் அவை உன்னை நிலை அறியா

  மாயை இது என்கொலோ வாராதே வரவல்லாய் – (ஆரண்ய காண்டம்)

உரை: tamilvu.org

(அடியார்க்கு) வருதற்கு 'அரியார் போலிருந்து

மிக எளியார்போல் வரும் வல்லமை உடையானே!; தாய் தன்னை அறியாத

கன்று இல்லை - தன் தாயைத் தெரிந்து கொள்ளாத கன்று இல்லை; தன்

கன்றை ஆயும் அறியும் - (அதுபோல்) தாயும் தன் கன்றை அறிந்து

கொள்ளும்; ஐய! -தலைவனே!; உலகின் தாய் ஆகின் எப்பொருளும் நீ

அறிதி - எல்லா உலகங்களுக்கும்அன்னை ஆனதால் எல்லாப்

பொருள்களையும் நீ அறிகிறாய்; அவை உன்னை நிலை அறியா -

அப்பொருள்கள் உன் தன்மையை அறியாதுள்ளன; மாயை இது என்

கொலோ? - இம்மாயச் சுழல்எதுவோ? (என்னால் அறிய முடியவில்லை).

 

     வாராதே வரவல்லாய் என்பதை வந்தாய் போல வாராதாய் வாராதாய்

போல் வருவானே' என்ற பெரியார் திருவாய்மொழிப் பாசுரத்துடன் (60 : 9)

ஒப்பிடின் மேலும் தெளிவுகிட்டும். தாய்தன்னைக் கன்றறிவதை நாலடியாரும்

கூறும் (101). ஆயின் உயிர்களை நீ படைத்தாலும் அவை உன்னை

அறியவில்லை. நீயோ எல்லாம் அறிந்தவன்.   

 

3. சொல் ஒன்று உரைத்தி; பொருளாதி; தூய

    மறையும் துறந்து, திரிவாய்;

வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி;

    மிளிர்சங்கம் அம் கை உடையாய்!

‘கொல் ‘என்று உரைத்தி; கொலை உண்டு நிற்றி;

    கொடியாய் உன் மாயை அறியேன்;

அல்லென்று நிற்றி; பகல் ஆதி! ஆர், இவ்

    அதிரேக மாயை அறிவார்?

உரை: tamilvu.org

ஒன்று  சொல்  உரைத்தி  -  ஒப்பற்ற   நாத வடிவினன்  என்று

சொல்லப்படுகிறாய்;   பொருள்   ஆதி  -  சொற்களின்  பொருளும்

ஆகிறாய்;  தூய   மறையும்   துறந்து  திரிவாய்  -  தூய்மையான

வேதங்களையும்  கடந்து விளங்குகிறாய்;  வில்  ஒன்று எடுத்தி சரம்

ஒன்று எடுத்தி - (அறம் தலை நிறுத்துதற்காகக் கையில்) வில் ஒன்றை

ஏந்தியுள்ளாய்;   (அதில்    வைத்துத்    தொடுப்பதற்காக)   ஒப்பற்ற

அம்புகளையும்  கைக்கொண்டு  இருக்கிறாய்;  அங்கை மிளிர் சங்கம்

உடையாய்  -  அழகிய கைகளில் ஒளி பொருந்திய (பாஞ்ச சன்னியம்

என்ற)  சங்கினைக் கையில் ஏந்தியுள்ளாய்; கொல் என்று உரைத்தி -

(தீயவர்க்குப்  பகைவனாய்  இருந்து) கொல்லுக  என்று சொல்லுகிறாய்;

கொலையுண்டு நிற்றி  -  (நீயே பகைவராய் இருந்து) கொல்லப்பட்டுக்

கிடக்கிறாய்;  கொடியாய் -  (இவ்வாறு)  முரண்  பல  கொண்டவனே;

உன்மாயை அறியேன் - உனது  மாயச் செயல்களை  எவ்வகையிலும்

என்னால் அறியமுடியவில்லை; அல் என்று நிற்றி - (நீ)  இரவு என்று

கூறும்படியும்  நிற்கின்றாய்;  இவ்  அதிரேகமாயை  -   இந்த  மிக்க

மாயச்செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.

 

இப்பாடல்   முரண்களின்   சேர்க்கையாக   இறைவனை   விளக்க

முயல்கிறது.   திருமால்,   சொல்,   பொருள்,   கொலை   செய்பவன்,

கொல்லப்படுபவன்,  இரவு  பகல் ஆகியவைகளாக இருக்கிறான்  என்று

கூறி அனைத்தும் கடவுளின் சொரூபம் என்று விளக்குகிறார்.

 

4. மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி;

    மயலாரும் யானும் அறியேன்

துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி;

    ஒருதன்மை சொல்ல அரியாய்;

பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி,

    பிறவாமல் நல்கு பெரியோய்!

அறம்தான் நிறுத்தல் ஆரிது ஆக! ஆர், இவ்

    அதிரேக மாயை அறிவார்?-(யுத்த காண்டம்) 

உரை: tamilvu.org

பிறவாமல் நல்கு பெரியோய் - (பத்துடை அடியவர்கள்) மற்றீண்டு

வாராப் பிறவாத பெருநெறி தருகின்ற பெரியவனே! மறந்தாயும் ஒத்தி -

(நீ)  (உன்   உண்மைத்   தன்மையை)  மறந்தவன்  போலவும்  காட்சி

தருகிறாய்;  மறவாயும்  ஒத்தி  -  (அவதார  நோக்கமாகிய பாவத்தை

அழிக்க  எண்ணியிருப்பதால்)  உன்  உண்மை  நிலையை மறவாதவன்

போலவும்  இருக்கிறாய்;  மயல்  - (இத்தன்மையான  உனது)  மாயைச்

செயலை;  ஆரும்  -  (உலகத்தவர்)   யாவரும்;  யானும்  -  நானும்;

அறியோம்  - அறிய முடியாதவர்களாய் உள்ளோம்; துறந்தாயும் ஒத்தி

- (பற்றற்று இருத்தலால்) துறந்தவன் போலவும்  இருக்கிறாய்; துறவாயும்

ஒத்தி - (தம்பி கட்டுண்டமை கண்டு வருந்தி அழுதலால்)  துறவாதவன்

போலவும்  இருக்கிறாய்;  ஒரு தன்மை சொல்ல அறியாய் - (இவ்வாறு

இருத்தலினால்) ஒரு தன்மை உடையவன் என்று சொல்ல  அரியவனாக

விளங்குகிறாய்;  பிறந்தாயும்  ஒத்தி - (தசரதன் மதலையாய்த் தாரணி

வந்ததால்)  பிறந்தவன்  போலவும்  இருக்கிறாய்;  பிறவாயும் ஒத்தி -

(வினை    வசத்தால்     பிறவாமையின்)    பிறவாதவன்   போலவும்

விளங்குகிறாய்;  அறம் தான் நிறுத்தல்  அரிது  ஆக  -  அறத்தை

இவ்வுலகில்  நிலை  நிறுத்தல்  அருமை  ஆக இருப்பதால்  (அதனை

நிலை  நிறுத்த  மானிடச்  சட்டை தாங்கி வந்தவனே); இவ் அதிரேக

மாயை -  இந்த  மிகுதியான மாயச்  செயலை; ஆர் அறிவார் - யார்

அறிவார்கள்.

 தன்   சொரூபத்தை மறந்தும் மறவாதும், பிறந்தும் பிறவாதும் உள்ள

இறை   நிலை   இப்பாடலில்   விளக்கிக்    கூறப்படுகிறது.  திருமால்

மனிதனாய்  அவதரித்து மனிதனைப் போலவே இன்ப   துன்பங்களுக்கு

ஆட்பட்டமை கொண்டு இவ்வாறு கூறினார் என்க.

 

4. தா இல் பொன் - தலத்தின், நல்

    தவத்தினோர்கள் தங்கு தாள்

  பூ உயர்த்த கற்பகப் பொதும்பர்

    புக்கு ஒதுங்குமால்-

 ஆவி ஒத்த அன்பு சேவல்

    கூவ வந்து அணைந்திடா

ஓவியப் புறாவின் மாடு

   இருக்க ஊடு பேடையே – (பால காண்டம்) 

உரை : tamilvu.org

ஆவி  ஒத்து சேவல் கூவ- தனது உயிருக் கொப்பான  ஆண்

புறாவானது  கூவி  அழைக்கவும்;  அன்பின்  வந்து அணைந்திடாது-

அன்புடன்  வந்து  தழுவிக்  கொள்ளாமல்;  ஓவியப்  புறாவின் மாடு

இருக்க-  அந்த வாயிலின் புறத்தே சித்திரத்தில் அமைந்துள்ள   பெண்

புறாவின்   பக்கம்   (ஆண்  புறாஉடன்);  இருந்ததால்  ஊடுபேடை-

ஊடல்கொண்ட  பெண்புறா;  தாஇல் பொன்தலத்தில்- குற்றமற்ற தேவ

உலகிலே;  நல்தவத்தினோர்கள் தங்கு-  நல்ல  தவம்  செய்தவர்கள்

தங்கியுள்ள;   தாள்   பூவுயிர்த்த-   தாளை   உடையதும்  மலர்கள்

பூத்திருப்பதுமான; கற்பகப்  பொதும்பர்  புக்கு ஒதுங்குமால்- கற்பகச்

சோலையிலே சென்று மறைந்திருக்கும்.

 

கோபுர     வாயிலில் வாடும்  ஆண்புறா, ஓவியப் புறாவை உண்மை

என  நினைத்து  அதன்  அருகிருக்கும்  அதனைக்   கண்டு  ஊடிய

பெண்புறா    விண்ணுலகத்தின்    கற்பகச்   சோலையிலே     புகுந்து

மறைந்திருக்கும்.  இது  மயக்கவணி. கற்பகம்: நினைத்ததைத்    தருவது.

சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், அரிசந்தனம் என்ற    ஐவகை

மரங்கள்  நிறைந்திருப்பது இச்சோலை என்பர். தாவில்:   குற்றமில்லாத.

தாள்: அடி நாளமும் ஆம்.   

 

 

சிலப்பதிகாரம் - நூல் கட்டுரை

குமரி, வேங்கடம், குண குட கடலா

மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில்,

செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின்,

ஐந்திணை மருங்கின், அறம், பொருள், இன்பம்,

மக்கள் தேவர் என இரு சார்க்கும்

ஒத்த மரபில் ஒழுக்கொடு புணர,

எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை

இழுக்கா யாப்பின் அகனும் புறனும்

அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய

பாடலும், எழாலும், பண்ணும், பாணியும்

அரங்கு, விலக்கே, ஆடல், என்று அனைத்தும்

ஒருங்குடன் தழீஇ, உடம்படக் கிடந்த

வரியும், குரவையும், சேதமும், என்று இவை

தெரிவுறு வகையான், செந்தமிழ் இயற்கையில்,

ஆடி நல் நிழலின் நீடு இருங் குன்றம்

காட்டுவார்போல், கருத்து வெளிப்படுத்து,

மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய

சிலப்பதிகாரம் முற்றும்.

உரை: ந.மு.வேங்கடசாமி நாட்டார்

குமரி வேங்கடம் குண குட கடலா மண்திணி மருங்கில் தண்டமிழ் வரைப்பில் - அணுக்கள் செறிந்த நிலவுலகிலே தெற்கிற் குமரியும் வடக்கில் வேங்கடமும் கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லையாக அவற்றிடைப்பட்ட தண்டமிழ் நாட்டில், செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதிகள் ஐந்திணை மருங்கின் - செந்தமிழ்நாடு கொடுந்தமிழ் நாடு என்னும் இரு பகுதியினும் அமைந்த குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்னும் ஐந்து நிலத்தினும் வாழ்வார்க்கு, அறம்பொருள் இன்பம் மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர - அறம்பொருள் இன்பமாகிய உறுதிப் பொருள்கள் மக்கள் தேவர் என்னும் இரு பகுதிக்கும் அமைந்த தன்மையையுடைய ஒழுக்கத்துடன் பொருந்த, எழுத்தொடு புணர்ந்த சொல்லகத்து எழு பொருளை இழுக்கா யாப்பின் - எழுத்தும் அதனாலாய சொல்லும் அதன்கட்டோன்றும் பொருளுமாகிய அம் மூன்றிலக்கணத்தினின்றும் வழுவுதலில்லாத செய்யுட்களால், அகனும் புறனும் அவற்று வழிப்படூஉம் செவ்வி சிறந்தோங்கிய பாடலும் - அகமும் புறமுமாகிய அவற்றின் வழிப்படும் அழகு மிக்குயர்ந்த பாட்டும், எழாலும் பண்ணும் பாணியும் - யாழும் பண்ணும் தாளமும், அரங்கு விலக்கே

 

       ஆடல் என்று அனைத்தும் - அரங்கும் விலக்குறுப்பும் கூத்தும் என்ற அனைத்தையும், ஒருங்குடன் தழீஇ - ஒரு சேரத் தழுவி, உடம்படக் கிடந்த வரியும் குரவையும் சேதமும் என்றிவை - அவற்றுடன் இசைவுபெறக் கிடந்த வரியும் குரவையும் சேதமும் என்னும் இவைகள், தெரிவுறு வகையால் - விளங்கும் வகையால், செந்தமிழ் இயற்கையின் - செந்தமிழின் மரபாலே, ஆடி நல் நிழலின் நீடு இருங்குன்றம் காட்டுவார்போல் - ஆடியின் நல்ல நிழலில் உயர்ந்த பெரிய மலையினைக் காட்டுவார் போல, கருத்து வெளிப்படுத்து - கருத்துக்களைத் தோற்றுவித்து, மணிமேகலைமேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் - மணிமேகலை யென்னும் தொடர்நிலைச் செய்யுளோடு கூடி உரைக்கப்படும் பொருள் முடிந்த சிலப்பதிகாரக் காப்பியம் முற்றுதலுற்றது என்க.

 

       அறம் பொரு ளின்பம் ஒழுக்கொடு புணர எனவும், பாடல் முதலியன தெரிவுறு வகையால் எனவும், யாப்பின் இயற்கையின் கருத்து வெளிப்படுத்து எனவும் இயையும். மலையின் வடிவு முழுதும் சிறிய ஆடி நிழலில் விளங்கித் தோன்றுமாறு போலப் பரந்த பொருளெல்லாம் சுருங்க வெளிப்படுமாறு செய்தென்க. சேதம் என்பது விலக்குறுப்புக்களிலொன்று ; விலக்கும் சேதமும் வேறு வேறாகவும், சேதம் என்பதனை வரி குரவை என்பவற்றோடு சேர்த்தும் கூறியிருப்பதன் கருத்துப் புலனாகவில்லை. நான்கு பொருள்களுள் சிலப்பதிகாரம் அறம் முதலிய மூன்றனையும், மணிமேகலை வீட்டினையுங் கூறுதலின் மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய என்றார்.